இதழ் - 86 இதழ் - ௮௬
நாள் : 17-12-2023 நாள் : ௧௭-௧௨-௨௦௨௩
அறியாமையை நீக்கிவிடு.
பாடல் –83
கோவதைசெய் யப்பிடித்த கோளரிக்குத் தன்னுடலை
ஈவனென்றா னேதிலீப னென்னுமன்னன் – ஆவதனால்
நட்பாளும் புன்னைவன நாதமன்னா வெப்போதும்
உட்பேதை மையகற் று.
உரை
நட்பாளும் புன்னைவன நாத மன்னவனே! பசுவைக் கொலை செய்யப்பிடித்த சிங்கத்திற்குத் தனது உடலைக் கொடுப்பேன் என்று திலீபன் என்னும் மன்னன் சொன்னான். ஆதலால் எப்பொழுதும் அறியாமையை நீக்கி செயலாற்றுக.
விளக்கம்
கோ – பசு. வதை – கொலை. கோளரி – சிங்கம். திலீபன் – சூரியகுலத்து மன்னன். பேதைமை – அறியாமை.
திலீபராசன் கதை
திலீபன் என்பவன் சூரியவமிசத்துள்ள ஓரரசன். இவன் பிரபல கீர்த்திமானாயட அரசியல் செய்து வருங்காலத்திலே புத்திரப்பேறின்றிப் பிதிர்க்கடனை எப்படித் தீர்ப்பேன் என்று மிக்க வியசனமுற்றுத் தன் மனைவியோடு குலகுருவாகிய வசிட்டமுனிவரையடைந்து தன்குறையை முறையிட்டான். வசிட்டமுனிவரும் திலீபனுக்குச் சந்ததி பிறத்தற்குத் தடையாயுள்ள காரணத்தை ஆராய்ந்து “அரசனே! நீ ஒருமுறை தேவலோகம்போய் வருகையிலே வழியிற்கிடந்த காமதேனுவை வழிபடாது புத்திரோற்பவ காலங்கருதி விரைந்து வந்தாய். அக்காமதேனு தன்னை அவமானஞ் செய்தாய் என்று கோபித்துச் சாபங்கூறிற்று. அக்காமதேனுவின் கன்றாகிய இந்த நந்தினியை விரதம்பூண்டு வழிபடுவாயாயின் அச்சாப நீங்கப்பெற்று புத்திரப்பேற்றினையும் அடைவாய்” என்றார். பின்னர் திலீபன் அம்முனிவரை நோக்கி இந்த நந்தினியை எப்படி வழிபட வேண்டும் என்று கேட்டான். வசிட்டமுனிவர் திலீபனை நோக்கி “அரசனே! காமம் முதலியவற்றை வெறுத்துச் சாகமூலபவாதிகளைப் புசித்துப் பரிசுத்தத்தோடும் இந்த நந்தினிக்குப் பூசை செய்தி. இந்த நந்தினி நிற்கும்போது நீயும் நிற்றி! போகும்போது நீயும் போகுதி! நீருண்ணும்போது நீயும் உண்ணுதி! கிடக்கும்போது நீயும் இருத்தி! இது நின் வழிபாட்டிலே மகிழும் வரைக்கும் வேறொன்றை எண்ணாதே! இதற்கு யாதொரு தீங்கும் வாராது காத்தி! நின் பெருந்தேவிதானும் இது மேயச் செல்லும்போது என்னுடைய ஆச்சிரம எல்லைவரையும் கொண்டுபோய் விடவேண்டும். அது திரும்பி வரும்போது அவ்வெல்லையிற் போய்நின்று வழிபட்டுப் பூசித்துப் பின்வரல் வேண்டும்” என்று கட்டளையிட்டு ஆசீர்வதித்துப் பன்னசாலையில் விடுத்தார்.
பின்னர் மற்றைநாள் தொடங்கி வசிட்டமுனிவர் சொல்லியபடியே விரதம் பூண்டு நந்தினியைப் பூசித்து வழிபட்டு வந்தான். அப்படியே இருபத்தொரு நாள் சென்றொழிந்தது. அவ்விருபத்தோராம் நாளிலே அந்த நந்தினி அரசனுடைய அன்பைப் பரிசோதிக்கக் கருதி மேய்ந்து மேய்ந்து இமயமலைச்சாரலில் போயிற்று. அரசன் இமயமலையின் சிறப்புக்களை ஒருகணம் வரையிற் பார்த்து நின்றான். நந்தினி இளம்புல்லை மேய்ந்துகொண்டு அங்குள்ள ஒருமுழைஞ்சிலே புகுந்தது. அப்போது சிங்கமொன்று நந்தினிமேலே பாய நந்தினி குளறி விழுந்தது. அரசன் பாணம்விட முயன்றும் கைகள் பந்தமாயின. பின்னர் அரசனுஞ் சிங்கமுஞ் சம்பாஷணை செய்தபோது அரசன் இப்பசுவை விடும்படியும் அதற்காகத் தன்னுடலை உண்ணும்படியுங் கேட்டுப் பல நியாயங்காட்டி யாசித்தான். பின்னர்ப் பசுவாகிய நந்தினி சிங்கமாய் வந்ததுந் தானே என்று சொல்லிப் புத்திரப் பேற்றிற்கும் அருள்செய்தது. இப்படியே நந்தினியின் வரத்தினாலே இத்திலீபன் இரகு என்பவனைப் பெற்றான்.
கருத்து
அறியாமையை நீக்கி செயல்புரிய வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment