பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-84

இதழ் - 87                                                                                                      இதழ் - 
நாள் : 24-12-2023                                                                                       நாள் : --௨௦௨௩



 
ஆத்திசூடி (ஔவை)
 பையலோடு இணங்கேல் 
 
உரை
    அறிவில்லாத சிறுபிள்ளைகளோடு கூடித் திரியாதே.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –84
சச்சந் தனைமுன் சதிகட்டி யங்காரன்
நிச்சயமாய்ச் செய்த நிறைபிழைபார் – பொற்சிகர
தீபமெனும் புன்னைவன தீரனே யானதுகண்
டேபைய லோடிணங் கேல்.
உரை
    பொன்மலைமுடியில் ஒளிவிடும் தீபம் போன்ற புன்னைவன தீரனே! சச்சந்தன் என்னும் அரசனுக்கு முன்பு கட்டியங்காரன் என்பவன் செய்த பெரிய பிழையைக் கவனித்துப்பார். நான் அதைக் கண்டு சொல்கிறேன் அறிவற்ற சிறுபிள்ளைகளோடு எதற்காகவும் இணங்கித் திரியாதே.

விளக்கம்
 சச்சந்தன் – ஏமாங்கத நாட்டின் அரசன். சீவகசிந்தாமணி காப்பியத்தலைவனான சீவகனின் தந்தை.  நிறைபிழை – பெரும்பிழை. பொற்சிகர தீபம் – பொன்னால் செய்யப்பட்ட மலை சிகரத்தில் வைக்கப்பட்ட தீபம் வெகுதொலைவில் இருப்பவர்களுக்கும் வழிகாட்டும். அதைப்போன்றவன் புன்னைவன நாதன் என்பது கருத்து. பையல் – சிறுபிள்ளை, பையன் என்று வழக்குச் சொல்லில் இன்று சொல்வது போன்றது.

கட்டியங்காரன் கதை:
சச்சந்தன் என்பவன் ஏமாங்கத நாட்டில் இராசமாபுரத்திலே அரசு செய்துவந்த ஓர் அரசன். இவனுக்கு மந்திரிமார் பலர். அவருள்ளே கட்டியங்காரன் என்பவனும் ஒருவன். சச்சந்தன் ஸ்ரீதத்தன் மகளாகிய விசயை என்பவளை திருமணம் செய்து பேரகுடைய அவள்மேல்கொண்ட ஆசைப்பாட்டின் மிகுதியால் இடையறாமல் அவளோடு இன்பம் அனுபவிக்கக்கருதி அரசபதவியை வெறுத்து மற்றை மந்திரிமார் சொல்லையும் கொள்ளானாய்க் கட்டியங்காரனை அழைத்து “நான் மனைவியாகிய விசயையை பிரிதலாற்றேன். நீயே அரசனாய் இந்நாட்டினைக் காத்துவருக” என்று அவனை நியமித்து மனைவியைப் பிரியாது வாழ்ந்தான். பின்னர் கட்டியங்காரன் படைகளோடு போய் அரசனோடு போராடி அரசனைக் கொன்றுவிட்டுத் தான் கருதியபடியே அரசாட்சியைத் தன்னுடையதாக்கிக் கொண்டான்.

கருத்து
    அறிவற்ற சிறுபிள்ளைகளோடு இணங்கித் திரியக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும். 


தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment