பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 85

இதழ் - 88                                                                                                     இதழ் - 
நாள் : 31-12-2023                                                                                        நாள் : --௨௦௨௩


 
ஆத்திசூடி (ஔவை)
 பொருடனைப் போற்றிவாழ் 
 
உரை
    பொருளை வீணாக்காமல் மேன்மேலும் உயரும்படி காத்து வாழ்க.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –85
             நவநிதி பெற்றுந்தன் னம்பரரு ளில்லார்க் 
             கவிழுநல்கான் காப்பா னவன்போற் – புவிதழையத்
             தேன்பொழியும் புன்னைவன தீரனே நீயென்றும் 
             வான்பொரு டனைப்போற்றி வாழ்.

உரை
   உலகம் உயரும்படி இன்பம்பொழியும் புன்னைவன தீரனே! ஒன்பதுவகையான பெருநிதிகளைப் பெற்றிருந்தாலும் நம்பரின் அருள் இல்லாதவர்களுக்கு அவற்றை அறிவுடையவன் அளிக்காது காப்பான். அவன்போல் நீயும் பெருஞ்செல்வத்தை வீணாக்காமல் மேன்மேலும் உயரும்படி பாதுகாத்து வாழ்க.

விளக்கம்
     நவநிதி – கச்சபநிதி, கற்பநிதி, சங்கநிதி, பதுமநிதி, மகாநிதி, மகாபதுமநிதி, முகுந்தநிதி, நந்தநிதி, நீலநிதி ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதிகள். நம்பர் அருள்இல்லார் – இறையருள் இல்லார், அறமில்லார் என்றும் கொள்ளலாம். அவ்விழு நல்கான் – இறையருள் பெறாதார், அறமற்றார்களுக்கு அந்த செல்வத்தை வழங்கான். “வறியோர்க்கொன்று ஈவதே ஈகை” என்பார் வள்ளுவர். தேவைப்படுபவர்களுக்கு, பொருளருமை அறிந்தவர்களுக்குக் கொடு என்பது கருத்து. அங்ஙனம் இல்லாதாரிடத்திருந்து பொருளைக் காக்க வேண்டும் என்பதைக் காப்பான் என்றார். புவி தழைய – உலகத்தில் மகிழ்ச்சியும் வளமும் பெருக. தேன்பொழியும் – இன்பம் பொழியும்.

கருத்து
  பொருளை வீணாகச் செலவு செய்து இழக்கக்கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.  


தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment