இதழ் - 89 இதழ் - ௮௯
நாள் : 07-01-2024 நாள் : 0௭-0௧-௨௦௨௪
யாருடனும் சண்டையாகிய செயலைச் செய்யாதே.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 86
சங்கரனை யன்றியுமை தன்னைவலஞ் செய்யாமற்
பிங்கிருடி மூன்றுகால் பெற்றதனாற் – றுங்க
மனந்தளராப் புன்னை வனநாதா தொண்டர்
அஇனம்போற் றடிப்பிரி யேல்
உரை
மலை போன்று மனந்தளராத உறுதியுடைய புன்னைவன நாதனே! சங்கார காரணனனாகிய சிவபெருமானையன்றி யாரையும் வணங்காத பிருங்கி முனிவர் சிவபெருமானை வலஞ்செய்தும் உமையம்மையை வலஞ்செய்யாமற் தவிர்த்த காரணத்தினால் அவலமெய்தி பின்னர் சிவபெருமானால் மூன்று கால் பெற்றவரானார். அதனால் தொண்டர் இனம் போற்றி வணங்கும் இறைத்திருவடிகளை என்றும் பிரியாது வணங்குவாயாக.
விளக்கம்
(ஔவையார் இயற்றிய ஆத்திசூடியில் போர்த்தொழில் புரியேல் என்றும் இராமபாரதி எழுதிய ஆத்திசூடி வெண்பாவில் போற்றடிப் பிரியேல் என்றும் பாடம் உள்ளது). சங்கரன் – சிவபெருமான். இருடி – முனிவர், ரிஷி என்பதை இருடி என்பது வழக்கு. பிங்கிருடி – பிருங்கி முனிவர். துங்க – தூய்மை, மலை. துங்க மனம் – தூயமனம், மலை போன்று உறுதியான மனம். தொண்டர் இனம் – சிவனடியார்கள். அடி – இறைவன் திருவடிகள். தொண்டர் இனம் இறைவன் திருவடிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் முதற்பகுதி “நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க“ என்று தொடர்ச்சியாக இறைவன் திருவடிகளைப் போற்றிச் செல்கிறது. “இங்கு என் தலைமேல் நின் கால்பட்டு அழிந்தது அயன் கையெழுத்தே“ என்று அருணகிரிநாதர் பாடுவார். பல இலக்கியங்கள் இக்கருத்தை முன்வைக்கின்றன. அதனால் அருளும் செயலை இறைவன் திருவடி என்று கொண்டனர் நமது முன்னோர் என்பது தெளிவு. இராமபாரதியும் தொண்டர்கள் போற்றி வணங்கும் திருவடிகளைப் பிரியாது வணங்குக என்கிறார்.
பிருங்கிருடி கதை:
வேதாங்கங்களை நன்றாகக் கற்றுணர்ந்த பிருங்கி என்னும் முனிவர் ‘சிவனொருவரே தியானிக்கப்படத்தக்கவர்’ என்பது முதலிய சுருதிகளைக் கடைபிடித்துத் தேவியாகிய உமையை விலக்கிச் சிவனை மாத்திரம் வலஞ்செய்துவந்தார். இதனை அறிந்த உமாதேவியார் எம்பெருமானுடைய திருமேனியிலே தாமும் பாதியாயிருக்கக் கருதித் திருக்கேதாரத்திலே போய்ச் சிவனை நோக்கித் தவஞ்செய்து சிவனுடைய திருமேனியிலே தாமும் பாதியாயினர். பின்னர் பிருங்கிருடி வண்டு வடிவங்கொண்டு தேவியும் சிவனுமாயிருக்குந் திருமேனியிலே தேவியை விலக்க எண்ணி நடுவே துளைத்தார். அதுகண்ட உமாதேவியார் அவ்வண்டின் சக்தியை இழுத்துவிட வண்டுருவங்கொண்ட பிருங்கிருடி கீழே விழுந்தார். அதுகண்ட சிவன் அம்முனிவருக்கு முன்னொருகாலும் ஒருதண்டமும் கொடுத்தார்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
கருத்து
இறைவன் திருவடிகளை என்றும் போற்றி வணங்க வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment