பக்கங்கள்

அரங்கேற்று காதை - 8 (தொடர்ச்சி . . .)

இதழ் - 123                                                                                     இதழ் - ௧
நாள் : 01- 09 - 2024                                                                    நாள் :  -  - ௨௦௨௪



அரங்கேற்று காதை - 8
( தொடர்ச்சி . . . )

     மகாவித்துவான் பெருந்துறைப் புராணம் இயற்றிக் கொண்டிருந்த தொடக்க காலகட்டத்தில் அதை ஏட்டில் எழுதிவந்த உ.வே. சாமிநாதருக்கு தடீரென அம்மை கண்டது. காய்ச்சலால் அவதியுற்ற அவர் சூரியமூலைக்குச் சென்று சில நாட்கள் ஓய்வுகொண்டார். அம்மை சரியானதும் 26.02.1873 அன்று மீண்டும் திருவாவடுதுறைக்கு வந்து மகாவித்துவானிடம் பாடம் கேட்கத் தொடங்கினார். அவரது எழுத்துப் பணிகளும் தொடரலாயின.

     மகாவித்துவான் அவர்கள் அவ்வப்பொழுது ஏற்படும் செலவுகளுக்கு தெரிந்தவர்களிடம் கடன் பெற்றும் நூல்கள் இயற்றி முடித்தவுடன் கிடைக்கும் பொருளைக் கொண்டு கடனைத் திருப்பி அடைத்தும் வந்தார். பெருந்துறைப் புராணம் இயற்றத் தொடங்கிவிட்டாலும் பணிமிகுதி காரணமாக அதனை மேற்கொண்டு இயற்றவோ அரங்கேற்றச் செல்லவோ இயலாது இருந்தது. 

     இறைவனின் சோதனை மனிதனை வலிமையாக்குகிறது. அறிவியக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுவோரின் செயல்திறத்தை மேலும் உறுதியாக்குகிறது. மகாவித்துவான் அவர்களின் வாழ்வில் ஆத்மநாதர் அளித்த சோதனையொன்று பெருந்துறைப் புராணம் இயற்றுவதை விரைவுபடுத்தியது. 

     செலவு மிகுதியாகிய ஒருநாள் இவர் குமாரசுவாமித் தம்பிரானை மடத்தின் காறுபாறு ஒருவரிடம் அனுப்பினார். குமரசுவாமித் தம்பிரான் மடத்திற்குச் சென்று காறுபாறுவிடம் “மகாவித்துவான் ஐயா அவர்கள் தனக்கு ஐந்நூறு ரூபாய் அவசியாகத் தேவைப்படுகிறது என்றும் பெருந்துறைப் புராணம் அரங்கேற்றியவுடன் முதலையும் வட்டியையும் அளித்துவிடுவதாகத் தங்களிடம் சொல்லிப் பெற்றுவரச் சொன்னார்கள்” என்றார்.  

     “தம்பிரான் தவறாக நினைக்கக் கூடாது. எதை நம்பி இவருக்குக் கடன் கொடுப்பது? ஆதலால் இப்பொழுது அவருக்குப் பணம் கொடுப்பதற்குச் சௌகரியமில்லை என்று சொல்லிவிடுங்கள்” என்றார் காறுபாறு.

     காறுபாறுவின் பதிலைக் கேட்ட குமாரசாமித் தம்பிரான் வருத்தமுற்றார். இருந்தாலும் செய்வதறியாது நின்றார். “மகாவித்துவான் அவர்களின் பெருமையறியாது இவர் இங்ஙனம் சொல்லிவிட்டாரே. இதை எப்படி ஐயா அவர்களிடம் சொல்வது? இப்படியொரு தர்மசங்கடமான நிலையில் வந்து நிற்கும் நிலைமை வந்துவிட்டதே” என்று பலவாறு எண்ணி எப்படியோ உள்ளத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காறுபாறு சொன்ன செய்தியை மகாவித்துவான் அவர்களிடம் தெரிவித்தார். 

     காறுபாறுவின் பதில் அவருக்குப் பெரிய உளச்சோர்வை ஏற்படுத்தியது. உள்ளம் வெம்பினார். சிலகாலம் அங்கிருந்த அவர் வேறிடம் சென்று சிலநாட்கள் தங்கிவந்தால் உளவெம்மை சற்று தணியும் என்று கருதி பட்டீச்சுரம் செல்ல எண்ணினார். மடத்திற்குச் சென்று தேசிகரிடமும் சொல்லிக் கொண்டு பட்டீச்சுரம் பயணமானார். ஆனால் தேசிகரிடம் காரணத்தை சொல்லவில்லை.

( பின்னர் என்னவாயிற்று என்பதை வரும் வாரம் காண்போம் . . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

2 comments: