இதழ் - 124 இதழ் - ௧௨௪
நாள் : 08- 09 - 2024 நாள் : ௦அ - ௦௯ - ௨௦௨௪
அரங்கேற்று காதை - 8
( தொடர்ச்சி . . . )
கோயில்கள் தமிழ்மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகும். கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறுமளவிற்கு கோயில்களின் இருப்பு இங்கு வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் தங்கள் நிலத்திலுள்ள கோயில்களைப் பற்றிய வரலாற்றை அறியாத மக்களே பெரும்பான்மையினர். அதனை அறிவிக்க அறிவார்ந்த பெருமக்கள் தலபுராணம் என்ற இலக்கிய வகைமையைக் கைக்கொண்டனர். ஒரு குறிப்பிட்ட கோயில் குறித்து வழங்கப்படும் வரலாறு, தொன்மம், மக்கள் வழக்கு, இலக்கிய வழக்கு போன்றவற்றைத் தொகுத்து அளிக்கும் முயற்சியே தலபுராணமாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தலபுராணங்களை மிகுதியாகப் பாடியவர் திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை ஆவார். அவர் இயற்றிய தலபுராணங்களுள் ஒன்று மாணிக்கவாசகர் அருள்பெற்ற தலமான திருப்பெருந்துறை ஆகும். அந்நூல் இயற்றப்பட்ட சூழலும் அரங்கேற்றப்பட்ட தன்மையும் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.
திருவாவடுதுறை ஆதீனம்… மாலை வழிபாடு முடிந்து சந்நிதானம் தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் கொலு மண்டபத்தில் அமர்ந்து ஓலையில் திருக்கண் சார்த்தியிருந்தார். திருப்பெருந்துறை கட்டளை சுப்பிரமணியத் தம்பிரானிடமிருந்து வந்த விண்ணப்ப ஓலை அது. தேசிகர் முன்னிலையில் உ.வே.சாமிநாதர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியெழுந்தார். திருநீறு அளித்து வாழ்த்தினார் தேசிகர்.
“சந்நிதானம் அழைத்ததாக தகவல் வந்தது” என்றார் சாமிநாதர்.
“நாளை காலை நீர் மாயூரம் சென்றுவர வேண்டும்.”
“ஆகட்டும் சுவாமி”
“திருப்பெருந்துறை கட்டளைத் தம்பிரானிடமிருந்து ஒரு விண்ணப்பம் வந்துள்ளது. மகாவித்துவான் பெருந்துறை மீது ஒரு புராணம் இயற்றித் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நமக்கும் அதுவே விருப்பம். அத்தலத்து வடமொழிப் புராணத்தையும் பழைய தமிழ்ப்புராணங்களையும் உடன் அனுப்பிருக்கிறார். பெருந்துறைப் புராணத்தை இயற்றினால் அவருக்கும் தக்க பொருள் கிடைக்கும். நீர் அவரிடம் தகவல்களைச் சொல்லி அவருடைய உடன்பாட்டைப் பெற்று வந்து தெரிவிக்க வேண்டும்.”
“தங்கள் ஆணை சுவாமி” என்று தேசிகரிடம் நூல்களைப் பெற்றுக் கொண்டு விடைபெற்றார் சாமிநாதர்.
ஞாயிறு எழுந்தவுடன் சாமிநாதர் மாயூரத்திற்குப் பயணமானார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இல்லத்தை அடைந்து திண்ணையில் காத்திருந்தார். கும்பகோணம் பேட்டைத்தெரு வைத்தியநாத தேசிகர் மகாவித்துவானைச் சந்திக்க அங்கு வந்திருந்தார். சாமிநாதரைக் கண்டதும் மகிழ்ந்து அளவளாவினார். சிவழிபாட்டை முடித்துக் கொண்டு வந்த மகாவித்துவான் சாமிநாதரைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தார். திண்ணையில் அமர்ந்தார். ஆசிரியருக்கு வணக்கம் செலுத்திய சாமிநாதர் தாம் கொணர்ந்த புராண நூல்களை அவரிடம் ஒப்படைத்து தேசிகரின் செய்தியையும் கூறினார்.
செய்தியைக் கேட்டதும் பெருந்துறைப் பெருமானை நினைந்து கைதொழுதார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். அவரது எண்ணத்தில் சொற்கள் திரண்டெழுந்தன. கைகூப்பி கண்மூடி அமர்ந்திருந்தவரின் உதடுகள் அவற்றை உமிழ்ந்தன.
“நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த மெய்க்களிற்றை நினைந்து வாழ்வாம்”
“ஆகா… அருமை…” என்று வியந்து கூறிய வைத்தியநாத தேசிகர் “பெருந்துறையில் அருள்பாலிக்கும் வெயிலுவந்த விநாயகப் பெருமானுக்கு நல்ல தமிழணியைச் சூட்டியிருக்கிறீர்கள் ஐயா” என்று கைகூப்பினார்.
“நமச்சிவாயம்” என்றார் மகாவித்துவான்.
மூன்றாம் நாள் மகாவித்துவானும் சாமிநாதரும் மாயூரத்திலிருந்த ஒரு செல்வந்தரும் திருவாவடுதுறை சென்றனர். ஆதீனம் சென்று தேசிகரைச் சந்தித்து ஆசிபெற்றார். பெருந்துறைப் புராணத்தை இயற்ற தனது ஒப்புதலை அளித்தார். தேசிகரும் மகிழ்ந்து பெருந்துறைக் கட்டளைத் தம்பிரானுக்குச் செய்தி அனுப்பினார்.
நாட்கள் சென்றன. கட்டளை சுப்பிரமணியத் தம்பிரான் அனுப்பிய நூல்களை வாசித்து குறிப்பெடுத்துக் கொண்டார். ஒரு நல்ல நாளில் தேசிகரின் ஆசியைப் பெற்று புராணத்தைப் பாடத் தொடங்கினார்.
சாமிநாதரும் சில தமிழறிஞர்களும் தம்பிரான்களும் உடனிருந்தனர். ஓலைக்கட்டு அருகிலிருந்தது. எழுத்தாணி காணப்பெறவில்லை. அருகில் நின்றிருந்த மடத்துப் பணியாளர் ஒருவரை அழைத்து எழுத்தாணி எடுத்துவருமாறு கூறி அனுப்பினார். அவர் வருவதற்குள் காப்புப் பாடலை உள்ளத்துள் உருவெழுதிக் கொண்டார் என்பதை அவரது முகம் வெளிப்படுத்தியது. ஓலைக்கட்டை சாமிநாரிடம் கொடுக்கவும் பணியாளர் எழுத்தாணியுடன் வரவும் நேரம் சரியாக இருந்தது. எழுத்தாணியும் சாமிநாதரிடமே வழங்கப்பட்டது.
“எழுதிக் கொள்ளும்” கட்டளை வந்தது.
தயாராக நின்றிருந்த சாமிநாதர் எழுத்தாணியையும் ஓலைக்கட்டையும் இறுகப்படித்தார். விநாயகர் மீது காப்புச் செய்யுள் இயற்றி முடிக்கப்பட்டது.
“அடுத்து வெயிலுவந்த விநாயகக் கடவுள் துதி” என்றார்.
“ஐயா! ஒரு விண்ணப்பம்” என்றார் சாமிநாதர்.
“என்ன?”
“அடியேன் தங்களை மாயூரத்தில் சந்தித்து புராண நூல்களை ஒப்படைத்து தேசிகரின் செய்தியைக் கூறியபொழுது தாங்கள் வெயிலுவந்த விநாயகர் மீது ஓரடி சொல்லி வணங்கினீர்கள். அது எனக்கு நினைவிருக்கிறது. தாங்கள் அனுமதித்தால் கூறுகிறேன்.”
“அப்படியா...! சொல்லலாமே”
“‘நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த மெய்க்களிற்றை நினைந்து வாழ்வாம்’ என்பதே அப்படலடி ஐயா.”
“இது நன்றாக இருக்கிறது” என்று சொல்லி அவ்வடியை இறுதியாக அமைத்து முதல் மூன்றடிகளையும் கூறினார்.
சாமிநாதர் எழுதிக்கொண்டார்.
அருகிலிருந்த ஒருவர் மற்றொருவரிடம் “சாமிநாதன் எத்தனை எளியவனாக இருக்கிறான். மற்றவர்களாக இருந்திருந்தால் இந்நேரம் தங்களை எவ்வளவு பெருமையாக நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இவன் பணிவாக இருக்கிறானே. வாழ்வில் உயர்ந்த நிலையை இவன் அடைவான்” என்றார். ஆமாம் என்று தலையசைத்தார் மற்றவர்.
பெருந்துறைக்கு வடமொழியிலும் தமிழிலும் புராணங்கள் இருந்தாலும் கட்டளை சுப்பிரமணியத் தம்பிரான் மகாவித்துவானைக் கொண்டு ஒரு புராணம் பாடச் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதற்குக் காரணம் முன்னைய புராணங்களைக் காட்டிலும் நாட்டு வருணனை, நகர வருணனை முதலிய காப்பியச்சுவை நிரம்பிய ஒரு புராணம் பெருந்துறைக்கு அமைய வேண்டும் என்பதேயாகும். அவ்வடிப்படையிலேயே மகாவித்துவானும் பெருந்துறைப் புராணத்தை இயற்றிக் கொண்டிருந்தார்.
சாமிநாதர் ஒருநாள் கட்டளை சுப்பிரமணியத் தம்பிரான் கொடுத்தனுப்பிய பழைய பெருந்துறைப் புராணப் பாடல்களை படித்துப் பார்த்தார். அப்பொழுது அதில் ஓர் அமைப்பொழுங்கைக் கண்டார். அவ்வமைப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. தனது ஆசிரியர் இயற்றத் தொடங்கியிருக்கும் புராணத்திலும் அவ்வமைப்பு இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினார். அதை தக்கபொழுது கணித்து மகாவித்துவானிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.
“ஐயா அவர்களிடம் ஒரு விண்ணப்பம்.”
“என்ன?”
“பழைய பெருந்துறைப் புராணத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒவ்வொரு படலத்தின் தொடக்கத்திலும் வாதவூரடிகள் துதியொன்று இடம்பெற்றுள்ளது. தாங்கள் இயற்றும் பெருந்துறைப் புராணத்திலும் அங்ஙனம் இருக்க வேண்டும் என்பது அடியேனின் விருப்பம்” என்று பணிந்து நின்றார்.
“அதற்கென்ன அங்ஙனமே பாடிவிடலாம். அதுவும் நன்றாகவே இருக்கும்.”
மாணவனின் கோரிக்கை ஏற்று புராண அமைப்பை அமைத்துக் கொள்ளும் தனது ஆசிரியரின் குணத்தை எண்ணி வியந்து நின்றார் சாமிநாதர்.
பாடஞ்சொல்லியதுபோக ஓய்வு நேரங்களில் எல்லாம் மகாவித்துவான் பெருந்துறைப் புராணத்தை இயற்றிவந்தார். நாட்டுப் படலம் நிறைவடைந்தவுடன் அதனை சுப்பிரமணிய தேசிகரிடம் படித்துக் காட்ட வேண்டும் என்று விரும்பினார். அந்நிகழ்வில் தியாகராச செட்டியாரும் உடனிருந்தால் நன்றாக இருக்கும் என்பது அவரது விருப்பம். அதனால் சாமிநாதரை அழைத்து “இன்னவாறு நிகழ இருக்கிறது. சிறவாதவற்றையும் சிறக்கச் செய்யும் நீ உடனிருக்க வேண்டும்” என்று ஒரு கடிதம் எழுதுவித்து அனுப்பினார். மகாவித்துவான் குறித்த காலத்தில் வந்து தியாகராச செட்டியார் மகாவித்துவானை அணுகி வணங்கிவிட்டு படபடப்புடன் நின்றார்.
“‘நீ வந்து கேட்டு மகிழ வேண்டும்’ என்று சொல்லி அழைத்திருந்தால் வந்திருக்க மாட்டேனா? சிறவாதவற்றை சிறக்கச் செய்யும் என்று சொல்லி என்னை இப்படி வருத்தத்திற்கு ஆளாக்கி விட்டீர்களே. உங்கள் பாடலில் சிறவாத பகுதி ஒன்று இருக்க முடியுமா? வாய்ப்பே கிடையாது. இனியும் நீங்கள் என்னை இங்ஙனம் தண்டிக்கக் கூடாது” என்று கேட்டுக் கொண்டார்.
பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் கடவுள் வாழ்த்தும் நாட்டுப்படலமும் படித்துக்காட்டப்பட்டது. தேசிகர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். விரைவில் புராணத்தை இயற்றி அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
மகாவித்துவான் பெருந்துறைப் புராணம் இயற்றிக் கொண்டிருந்த தொடக்க காலகட்டத்தில் அதை ஏட்டில் எழுதிவந்த உ.வே. சாமிநாதருக்கு தடீரென அம்மை கண்டது. காய்ச்சலால் அவதியுற்ற அவர் சூரியமூலைக்குச் சென்று சில நாட்கள் ஓய்வுகொண்டார். அம்மை சரியானதும் 26.02.1873 அன்று மீண்டும் திருவாவடுதுறைக்கு வந்து மகாவித்துவானிடம் பாடம் கேட்கத் தொடங்கினார். அவரது எழுத்துப் பணிகளும் தொடரலாயின.
மகாவித்துவான் அவர்கள் அவ்வப்பொழுது ஏற்படும் செலவுகளுக்கு தெரிந்தவர்களிடம் கடன் பெற்றும் நூல்கள் இயற்றி முடித்தவுடன் கிடைக்கும் பொருளைக் கொண்டு கடனைத் திருப்பி அடைத்தும் வந்தார். பெருந்துறைப் புராணம் இயற்றத் தொடங்கிவிட்டாலும் பணிமிகுதி காரணமாக அதனை மேற்கொண்டு இயற்றவோ அரங்கேற்றச் செல்லவோ இயலாது இருந்தது.
இறைவனின் சோதனை மனிதனை வலிமையாக்குகிறது. அறிவியக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுவோரின் செயல்திறத்தை மேலும் உறுதியாக்குகிறது. மகாவித்துவான் அவர்களின் வாழ்வில் ஆத்மநாதர் அளித்த சோதனையொன்று பெருந்துறைப் புராணம் இயற்றுவதை விரைவுபடுத்தியது.
செலவு மிகுதியாகிய ஒருநாள் இவர் குமாரசுவாமித் தம்பிரானை மடத்தின் காறுபாறு ஒருவரிடம் அனுப்பினார். குமரசுவாமித் தம்பிரான் மடத்திற்குச் சென்று காறுபாறுவிடம் “மகாவித்துவான் ஐயா அவர்கள் தனக்கு ஐந்நூறு ரூபாய் அவசியாகத் தேவைப்படுகிறது என்றும் பெருந்துறைப் புராணம் அரங்கேற்றியவுடன் முதலையும் வட்டியையும் அளித்துவிடுவதாகத் தங்களிடம் சொல்லிப் பெற்றுவரச் சொன்னார்கள்” என்றார்.
“தம்பிரான் தவறாக நினைக்கக் கூடாது. எதை நம்பி இவருக்குக் கடன் கொடுப்பது? ஆதலால் இப்பொழுது அவருக்குப் பணம் கொடுப்பதற்குச் சௌகரியமில்லை என்று சொல்லிவிடுங்கள்” என்றார் காறுபாறு.
காறுபாறுவின் பதிலைக் கேட்ட குமாரசாமித் தம்பிரான் வருத்தமுற்றார். இருந்தாலும் செய்வதறியாது நின்றார். மகாவித்துவான் அவர்களின் பெருமையறியாது இவர் இங்ஙனம் சொல்லிவிட்டாரே.
( பின்னர் என்னவாயிற்று என்பதை வரும் வாரம் காண்போம் . . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
GOOD INFORMATION
ReplyDelete