பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 95

இதழ் : 95                                                                                                இதழ் : 
நாள்   : 18-02-2024                                                                              நாள் :  -0-௨௦௨௪ 
 
ஆத்திசூடி (ஔவை)
 மூர்க்கரோடு இணங்கேல் 
 
உரை
         மூர்க்கத்தன்மை உள்ளவர்களுடன் சேர்ந்து பழகாதே.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 92
           வேங்கை வரிப்புலி நோய்தீர்த்த விடகரியென் றோங்கு மவ்வை சொன்ன வுரைப்பொருள் – பாங்குடைய காமாற்றும் புன்னைவனக் காராளா வானதனால் ஏமூர்க்க ரோடிணங் கேல். 

உரை
     அழகுடைய காட்டைத் திருத்தி நாடாக்கும் புன்னைவனக் காராளனே! வேங்கை வரிப்புலியானது நஞ்சுடை பாம்பு தீண்டி துன்பப்பட அதன் நோயைத் தீர்த்த நஞ்சுமுறி மருத்துவன் அந்தப் புலிக்கே இரையானான் என்று ஔவை சொன்ன சொற்கள் வழக்கத்தில் உள்ளதனால் செருக்குடைய மூர்க்கர்களோடு சேர்ந்து பழகாதே.

விளக்கம்
    பாங்குடைய – அழகான. கா – காடு. காடுமாற்றும் – காட்டைத் திருத்தி நாடாக்குதல். காராளன் – வேளாளன். காடு திருத்தி நாடாக்குபவன் வேளாளன் ஆதலால் புன்னைவன நாதனைக் காராளன் என்றார். “வேங்கை வரிப்புலி நோய்தீர்த்த விடகரியென் றோங்கு மவ்வை சொன்ன வுரைப்பொருள்” என்பது மூதுரையில் ஔவையார் பாடிய பாடலின் உவமைக் கருத்து. அதனை எடுத்துக்காட்டி மூர்க்கரோடு இணங்கும் செயலால் விளையும் தீமையைச் சுட்டிக் காட்டுகிறார்.  

      “ வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
        ஆங்கதனுக் காகார மானாற்போல் – பாங்கறியாப்
        புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
        கல்லின்மேல் இட்ட கலம்.”     (மூதுரை, பா. 15)
                                  என்பது ஔவையாரின் மூதுரைப் பாடல்.

     வரிப்புலி என்பது காட்டுவிலங்கு. அதற்கு துன்பம் வந்துற்றபொழுது உதவி செய்த மருத்துவனையே அடித்துக் கொன்று தின்றது. அதுபோல மூர்க்கர்களுக்குச் செய்யும் உதவியும் பயனற்றது என்பது உணர்த்தப்படுகிறது. புலி என்பது மூர்க்கர்களுக்கும் மருத்துவன் செய்த உதவி மூரக்கர்களோடு இணங்கும் செயலுக்கும் உவமையாயிற்று. 

கருத்து
  மூர்க்கர்களோடு இணங்கிப் பழகாது இருத்தல் வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment