பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 93

இதழ் - 93                                                                                                       இதழ் - 
நாள் : 04-02-2024                                                                                      நாள் : 0-0-௨௦௨

 
ஆத்திசூடி (ஔவை)
 மீதூண் விரும்பேல் 
 
உரை
         மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 90
        இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங்
        கழிபோ ரிரையான்க ணோயென் – றுளமுதுநூல்
        வாக்கியத்தாற் புன்னை வனநாதா முன்னயிறல்
        போக்கிமீ தூண்விரும் பேல்.

உரை
     புன்னைவன நாதனே! மிகுதியான, உடலுள்ளத்திற்குத் தகாத உணவினால் வரக்கூடிய தீமையை அறிந்து உண்ணக்கூடியவன் எய்தும் இன்பம் போல் மிகுதியான உணவினை உண்பவன் இன்பம் காணான் என்று சான்றோர் யாத்த அறிவார்ந்த நூல்களில் காணப்படுகின்றன. ஆதலால் நீ பசிக்கும் முன் உண்ணுதலைத் தவிர்த்து மிகுதியாக உணவுண்ணுதலை விரும்பாதே. 

விளக்கம்
    இழிவு – தாழ்வு, குறை. இழிவறிந்து உண்பான் – உடலுக்கும் உள்ளத்திற்கும் இவ்வுணவு ஏற்றதல்ல என்றறிந்து உண்பவன். கழிபோரிரையான் – அளவுக்கு மிஞ்சி உண்பவன். முதுநூல் – அறிவார்ந்த பெருமக்கள் யாத்த நூல். அயில் – உண்ணல். 

    கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
    சிறந்து மிகவுண்ணார் கட்டின்மேல் உண்ணார்
    இறந்தொன்றும் தின்னற்க நின்று

     என்று ஆசாராக்கோவை உண்ணும் முறை குறித்து எடுத்துரைக்கின்றது.  

    அதாவது படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் திறந்த வெளியிலும் உண்ணக்கூடாது. ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக உண்ணுதலும் கூடாது. கட்டில் மேல் அமர்ந்தும் உண்ணக்கூடாது. நெறி இல்லாமல் அளவு கடந்து யாதொன்றும் நின்றுகொண்டு திண்ணல் ஆகாது என்பது முன்னையோர் வகுத்த நெறி..

கருத்து
  பசிக்கும் பொழுது மட்டும் அளவோடு உண்ணுதல் வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment