பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 94

இதழ் - 94                                                                                                           இதழ் - 
நாள் : 11-02-2024                                                                                             நாள் : -0-௨௦௨

 
ஆத்திசூடி (ஔவை)
 முனைமுகத்து நில்லேல் 
 
உரை
         தேவையின்றி போர்முனையில் சென்று நிற்காதே.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 91
ஆட்டுக் கடாப்போரி லன்றுதசை நாடிநரி
மாட்டிக்கொண் டேயுயிரு மாய்ந்ததுபார் – தோட்டுமலர்
மாமருவும் புன்னை வனநாதா வீணாக
வேமுனைமு கத்துநில் லேல்.

உரை
     மெல்லிதழ்களைக் கொண்ட மலர்கள் மணம் பரப்பும் புன்னைவன நாதனே! ஆட்டுக் கிடாய்கள் இரண்டு போர்செய்துகொண்டிருந்தபொழுது அவற்றின் ஊன்விரும்பிய நரியொன்று அவற்றினிடையே சென்று மாட்டிக்கொண்டு உயிர்விட்டதைப் பார். எனவே தேவையில்லாமல் போய்முனையிற் சென்று நிற்காதே. 

விளக்கம்
    தசைநாடி – போரிட்டமையால் ஆட்டுக்கிடாய்களின் உடலில் வழிந்த குருதியோடு கூடிய தசைகளை உண்ண விரும்பி. தோடு – பூவிதழ். மரு – மணம். தேவையின்றி போரில் ஈடுபடவோ, போர்முனைக்குச் செல்லவோ கூடாது என்பதை ‘வீணாகவே’ என்ற சொல்லாற் குறித்தார். 

நரியின் கதை
    இரண்டு ஆட்டுக்கடாக்கள் ஒன்றோடொன்று பகைகொண்டு கடும் கோபத்தோடும் அடிபட்டன. இரண்டுக்குங் காயமுண்டாகி உடலினின்று குருதி பெருகிற்று. அதனை ஒரு நரி கண்டு குருதி பொருந்திய தசையை உண்பேன் என்று விரும்பிச் சென்று அவ்விரண்டுக்கும் இடையில் அச்சமயத்திலே போய் அகப்பட்டுத் தாக்குண்டு இறந்தது.

கருத்து
  தேவையில்லாத சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment