பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 97

இதழ் - 97                                                                                                     இதழ் - 
நாள் : 03-03-2024                                                                                    நாள் : 0-0-௨௦௨


 
ஆத்திசூடி (ஔவை)

 மேன்மக்கள் சொற்கேள் 
 
உரை
       அறமுடைய பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி நட.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல் – 94

        ஆசிரியன் சொற்கேட்ட வன்றே தசரதனார் 
        கோசிகன்பா லிராகவனைக் கூட்டிமிக்க – தேசுபெற்றார் 
        நாட்கமலப் புன்னைவன நாதமகி பாதருமங் 
        கேட்கின்மேன் மக்கள்சொற் கேள்.

உரை
    மலர்ந்த தாமரை மலர் போன்ற புன்னைவன நாத மகிபனே! ஆசிரியரான வசிஷ்ட முனிவருடைய சொல் கேட்டதுமே தசரத மன்னர் விசுவாமித்திரருடன் தனது மகன் இராமனை அனுப்பிவைத்து மிக்க புகழ்பெற்றார். ஆதலால் தருமம் கேட்பதாக இருந்தால் உயர்ந்த பெரியோர்களின் சொற்களைக் கேட்பாயாக.

விளக்கம்
     ஆசிரியன் – தசரதரின் குருவான வசிஷ்டர். தசரதன் – அயோத்தியின் மன்னர், இராமனின் தந்தை. கோசிகன் – கௌசிகன் என்றும் விசுவாமித்திரர் என்றும் அழைக்கப்படும் முனிவர். திரிசங்கு சொர்க்கத்தை உருவாக்கியவர். சப்தரிஷிகளில் ஒருவர். இராகவன் – இராமன். தேசு – புகழ்.   நாட்கமலம் – சூரியன் வரவால் மலர்ந்த தாமரை. மகிபன் – அரசன். 
        “ அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
          நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - எட்டுணையும்
          கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
          சுட்டாலும் வெண்மை தரும் ”
     என்று ஔவையார் மூதுரையில் கூறுவது ‘மேன்மக்கள் யார்’ என்பதை எடுத்துரைக்கின்றது. 

தசரதன் கதை:
சூரியகுலத்துள்ள இரகுவென்பவனுடைய மகன் அயன். அயனுடைய மகன் தசரதன். இந்தத் தசரதனுக்கு மகன்கள் நால்வர். அவருள்ளே மூத்த மகன் ஸ்ரீராமன். இந்த இராமன் வளர்ந்து மிக்க திறனுடையவனாய் விளங்கும் காலத்தில் விசுவாமித்திர முனிவர் செய்யும் யாகங்களுக்கு இராட்சதர்கள் இடையூறு செய்து வந்தனர். விசுவாமித்திரர் இராட்சதர்களை அடக்கித் தம்முடைய யாகத்துக்குத் துணை செய்யத்தக்கவன் இராமனே என்று நிச்சயித்துத் தசரதனிடம் போய் இராமனைத் தமக்குத் துணையாக விடும்படிக் கேட்டார். குருவாகிய வசிட்டமுனிவரும் விசுவாமித்திரருடனே இராமனை விடும்படி சொன்னார். பின்னர்த் தசரதன் பெரிதும் மனவருத்தமுடையவனாய் மறுத்தற்கஞ்சி இராமனை விசுவாமித்திரரோடுங் கூட்டியனுப்பினான். இராமன் விசுவாமித்திரரோடுங் கூடிச் சென்று கல்லாகக் கிடந்த அகலிகையை முன்போலப் பெண்ணாக்கியும், விசுவாமித்திரருடைய யாகத்துக்குத் தீங்குசெய்ய வந்த தாடகை என்பவளைக் கொன்றும், மிதிலையிலே வந்து வில்லு முறித்துச் சீதாப்பிராட்டியை விவாகஞ்செய்துந் தந்தைக்குப் புகழை உண்டாக்கினான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
    மேன்மக்களின் சொற்கேட்டு நடந்தால் புகழ் எய்தலாம் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment