பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 97

இதழ் - 100                                                                                             இதழ் - 00
நாள் : 23-03-2024                                                                             நாள் : -0-௨௦௨


ஆத்திசூடி (ஔவை)
 மோகத்தை முனி 
 
உரை
        நிலையற்ற பொருட்களின் மீதுள்ள ஆசையை வெறுத்துவிடு.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல் – 97
        தேவர் முனிவர்மண்ணோர் தென்புலத் தார்க்குமோகம்
        பாவவித் தென்றோதும் பழமறைகள் – ஆவதனால்
        வேளாளா புன்னைவன வித்தகா வித்தரையின்
        மூளுமோ கத்தை முனி.

உரை
    வேளாளா! புன்னவைன வித்தகா! தேவர்கள், முனிவர்கள், மண்ணுலகத்து மனிதர்கள், காலஞ்சென்ற முன்னோர்கள் யாவருக்கும் மோகம் என்பது பாவத்தின் முளை என்று பழமறைகளான அறிவுநூல்கள் கூறுகின்றன. ஆதலால் நெஞ்சில் மூளும் மோகத்தை வெறுத்து விலக்குக.

விளக்கம்
    தேவர் – விண்ணவர்கள், தேவலோகவாசிகள். முனிவர் – தவசீலர். மண்ணோர் – மண்ணுலகத்து உயிர்கள், சிறப்பாக மனிதரை உணர்த்தினார். தென்புலத்தார் – பிதிரர், “பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின் தென்புலத்தார் என்றார்” என்பது பரிமேலழகர் தரும் குறிப்பு. வித்து – விதை, ஆசை பாவத்தின் வித்து என்பதை ‘மோகம் பாவவித்து’ என்றார். மறை – வேதம், அறிவுநூல்கள். தொன்மைக் காலந்தொட்டு இச்சிந்தனை வழங்கி வருவதால் பழமறைகள் கூறுகின்றன என்றார்.

கருத்து
    பொருட்களின் மீதுள்ள பற்றை விடுக என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

1 comment: