பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 95

இதழ் - 98                                                                                              இதழ் - 
நாள் : 10-03-2024                                                                               நாள் : 0-0-௨௦௨


 
ஆத்திசூடி (ஔவை)
 மைவிழியார் மனையகல் 
 
உரை
        பரத்தையர் மனையைச் சேராமல் விலகிவிடுக.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல் – 95
        விப்பிரநா ராயணன்முன் வேசிதன்மே லாசையினால்
        இப்புவியிற் கட்டுண் டிழுக்குற்றான் – தப்பலவே
        சைவநெறிப் புன்னைவனத் தாளாளா வெந்நாளும்
        மைவிழியார் மனைய கல்.

உரை

    சைவ சமயம் கூறும் நெறிமுறைகளின்படி வாழும் புன்னைவனத் தளாளா! விப்பிரநாராயணன் என்பவர் முன்பு ஒருமுறை தன் ஒழுக்கநெறி பிறழ்ந்து பரத்தை ஒருத்தியின்மேல் ஆசைகொண்டு மனம் செலுத்தியதனால் இவ்வுலகில் கட்டுண்டு பழிச்சொல்லுக்கு ஆளானார். ஆதலால் எப்பொழுதும் மைதீட்டப்பட்ட கண்களைக் கொண்ட பரத்தையர் இல்லத்தைவிட்டு விலகியே இருப்பாயாக.

விளக்கம்

    விப்பிரநாராயணன் – ஆழ்வார்களுள் ஒருவரான தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இயற்பெயர். பிரம்மச்சரிய ஒழுக்கத்தினின்று தவறி இழுக்குற்றார் என்பதை ‘வேசிதன்மே லாசையினால் இப்புவியிற் கட்டுண் டிழுக்குற்றான்’ என்றார். புன்னைவன நாதன் சைவன் என்பதை ‘சைவநெறிப் புன்னைவனத் தாளாளா’ என்ற அடி எடுத்துக்காட்டுகிறது. மைவிழியார் - மைதீட்டப்பட்ட கண்களைக் கொண்ட பெண்கள். இவ்விடத்தில் பரத்தையரைக் குறிப்பிடுகிறது. மனை – இல்லம்.

தொண்டரடிப்பொடியாழ்வாரின் கதை:

    சோழநாட்டுத் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிறந்த விப்பிரநாராயணர் என்பவர் சிறுவயதுமுதலே திருவரங்கத்தில் அரங்கனுக்கு மலர்க் கைங்கர்யம் செய்யும் தொண்டில் ஈடுபட்டுவந்தார். ஆண்டுகள் சென்றன. ஒருமுறை தேவதேவி என்ற கணிகையைச் சந்தித்தார். அவள்பால் மனம் செலுத்தித் தனது தொண்டினை மறந்தார். தனது செல்வங்களை இழந்தார். அவருக்காக அரங்கன் தனது கோயில் பொன்வட்டிலைக் கொடுத்தார். கோயில் பொருளை களவாடியதாகக் அவர்மீது குற்றப்பழி விழுந்தது. பின்னர் அரங்கனே அனைவருக்கும் உண்மையை உணர்த்தினார். கணிகைத் தொடர்பிலிருந்து மீண்டுவந்த விப்பிரநாராயணர் தன்னை திருமால் அடியவர்களுக்கும் அடியவன் என்று வாழ்ந்தார். தொண்டரடிப்பொடி ஆழ்வாரானார். இறுதிவரை திருமால் பக்தியில் திளைத்து அரங்கன் திருவடிகளை அடைந்தார்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து

    பரத்தையர் தொடர்பு இழிநிலைக்குத் தள்ளும் என்பது பாடலின் மையக் கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment