இதழ் - 141 இதழ் - ௧௪௧
நாள் : 12 - 01 - 2025 நாள் : ௧௨ - ௦௧ - ௨௦௨௫
இரவு முழுவதும் மதுரைத் தமிழ்ப் புலவர்களின் எள்ளலும் தமது ஆசிரியரின் சொற்களும் திருத்தக்கதேவரின் எண்ணத்தில் எழுந்துகொண்டே இருந்தன. சமணர்களின் தமிழ்ப்பணியை தமிழ்ச்சங்கத்தாரே முழுமையாக ஏற்றுக்கொள்ளாது இருக்கின்றனரே என்ற சோர்வும் அதைப் போக்க வேண்டும் என்ற துணிவும் அவரை உறங்கச் செய்யாது உறுத்திக் கொண்டே இருந்தன. காலையில் அருணன் எழுந்தவுடன் எழுத்தாணியையும் சுவடிக்கட்டையும் எடுத்துக்கொண்டு குகையின் புறத்தில் ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தார்.
கிழக்கு நோக்கி அமர்ந்திருந்த அவரது முகத்தை சூரிய ஒளி பொன்னாய் மாற்றியிருந்தது. பொன்னார் மேனியராய் மரத்தடியில் கல்மேடையில் அமர்ந்திருந்த அவரைக் கண்ட சில இளந்துறவிகள் தேவனெனவே எண்ணினர். சூரியன் அவரது மேனியை ஒளிரச் செய்ததைப் போலவே அவரது அகத்தைத் தமிழ் ஒளிரச்செய்து கொண்டிருந்தது. தமிழ்ச் செய்யுள்கள் ஒன்றின்பின் ஒன்றாய் அவரது உள்ளத்தில் உதித்தன.
“ஓடும் நரியின் மீது விருத்தம் பாடுக” என்று ஆசிரியரின் கட்டளையை உள்ளத்தில் செயலாக்கிக் கொண்டிருந்தார். ஒரு நெடிய பெருமூச்சிற்குப் பிறகு வலக்கையிலிருந்த எழுத்தாணியை இடக்கை நாம்பிப் பிடித்திருந்த ஏட்டில் பதித்தார். வாய் சொற்களை முனுமுனுக்க கை அவற்றிற்கு வடிவம் கொடுக்கத் தொடங்கியது.
“பானிலா மதிய மூன்று பன்மணி மிடைந்த பாங்காய்
மேனிலா விரித்த போலும் விளங்குமுக் குடையி னீழல்
தேனவாங் குளிர்கொள் பிண்டிச் செல்வன்சே வடியை வாழ்த்தி
யூனவா நரியி னார்த முரைசிறி துரைக்க லுற்றேன்”
என்று முதற்பாடலை ஏட்டில் எழுதினார். தொடர்ந்து விரைவாகப் பாடலை இயற்றிக் கொண்டே இருந்தார். இதுகாறும் சமண சமயத்திலிருந்து தாம் கற்ற அறங்களையெல்லாம் வடிவத்தெடுத்து நரியைப் பொருளாகக் கொண்டு நூல் இயற்றினார். சூரியன் மெல்ல திசை மாறிச் சற்று நகர்ந்திருந்தான். ஓலைகள் புரண்டு கொண்டேயிருந்தன. எழுத்துகளால் அவை அழகுபெற்றுக் கொண்டிருந்தன. ஐம்பது பாடல்கள் நிறைவு பெற்றன.
“ஆக்குவ தேதெனி லறத்தை யாக்குக
போக்குவ தேதெனில் வெகுளி போக்குக
நோக்குவ தெதெனில் ஞான தோக்குக
காக்குவ தேதெனில் விரதங் காக்கவே”
என்று இறுதிப்பாடலை எழுதி நிறுத்தினார். ஓலைகளை மீண்டும் சுவடிக் கட்டாகக் கட்டி தனது ஆசிரியரைக் காணச் சென்றார்.
காலைப் பிச்சைக்குச் சென்று மாணவர்கள் சிலருடன் உரையாடியவாறே மலையேறிக் கொண்டிருந்த ஆசிரியர் குகைவாயிலில் திருத்தக்கதேவர் நிற்பதைக் கண்டார். தனது மாணவன் முகத்தில் தெறித்துக் கொண்டிருந்த உவகையைக் கண்டதும் நரியின் மீது விருத்தம் பாடப்பட்டுவிட்டதென அவருக்கு விளங்கிவிட்டது.
ஆசிரியரை அணுகிச் சென்று வணங்கினார் திருத்தக்கதேவர்.
“நரி விருத்தம் ஆகிவிட்டதா? சுவடிகளைக் கொடுக்கலாமே.”
பணிந்தெழுந்து சுவடிக்கட்டை ஆசிரியரிடம் கொடுத்தார். முதற்பாடலைப் படித்துப் பார்த்தார். முக்குடையண்ணல் மீது திருத்தக்கதேவருக்கிருக்கும் பக்தியை உணர்ந்து மகிழ்ந்தார். சமண அறங்களை சிறுசிறு கதைகளாகவும் அறமொழிகளாகவும் அமைத்துள்ள தனது மாணவனின் கவியாற்றலை வியந்தார்.
“திருத்தக்கதேவரே! உமது தமிழும் சமணத்தத்துவ அறிவும் எம்மை மிகவும் மகிழச் செய்கின்றன. நீங்கள் காப்பியம்பாட மிகத் தகுதியுள்ளவர். உம்மால் தமிழும் சமணமும் உறுதியாக ஒளிபெறும். உமது நூலுக்கான அருகவணக்கச் செய்யுளை நானே பாடித் தருகிறேன்.”
“எனது நல்லூழ் என்பதன்றி இதனை வேறு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை ஐயா” என்று நா தழுதழுத்தார் திருத்தக்கதேவர்.
“எழுத்தாணியையும் ஓலையையும் எடுத்துவா” என்று அருகிலிருந்த மற்றொரு மாணவனைப் பார்த்தார். குகைக்குள் ஓடிச்சென்று ஆசிரியரின் எழுத்தாணியையும் சுவடிக் கட்டிலிருந்த சில ஓலைகளையும் எடுத்துவந்து கொடுத்தார் மாணவர்.
கண்களைமூடி சற்றுநேரம் தியானித்த ஆசிரியர் சட்டென கண்விழித்து ஓலையைக் கீறத்தொடங்கினார். திருத்தக்கதேவரிடம் கொடுத்துவிட்டு “எனது அனுமதியும் ஆசியும் என இதைக் கொள்க” என்றார்.
பணிந்து அதனைப் பெற்றுக்கொண்ட திருத்தக்கதேவர் அதில் எழுதப்பட்டிருந்த பாடலை வாசித்தார்.
"செம்பொன் வரைமேற் பசும்பொன்னெழுத் திட்ட தேபோ
லம்பொன் பிதிர்வின் மறுவாயிரத் தெட்ட ணிந்து
வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு மூர்த்தி விண்ணோ
ரம்பொன் முடிமே லடித்தாமரை சென்னி வைப்பாம்”
கண்கள் பணிக்க ஆசிரியரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
“சீவகசாமியின் கதை உம்மால் தமிழ் மக்களிடம் பரவப் போகிறது. அது தரும் இன்பத்தில் யாவரும் மயங்கிக் கிடக்கப்போகின்றனர். உமது காப்பியத்தைப் பின்பற்றி பின்னால் தமிழில் நிறைய நூல்கள் தோன்றி மொழியை மேலும் செழுமையாக்கப் போவதை இப்பொழுதே நான் காண்கிறேன். திருத்தக்கதேவரே, இன்று மாலையே நீர் காப்பியம் பாடத் தொடங்கலாம். உமது காப்பியத்தை வாசிக்க நான் ஆவலோடு இருக்கிறேன்.”
“ஆணை ஐயா”
எழுத்தாளன் பாசறையில் தமிழன்னைக்கான சிந்தாமணியின் அச்சு கோர்க்கப்பட்டது. சொல்நெய் வார்க்கத் தயாரானார் திருத்தக்கதேவர்.
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
திருத்தக்க தேவர் நினைவைப் போற்றலாம்
ReplyDelete