இதழ் - 143 இதழ் - ௧௪௩
நாள் : 02 - 02 - 2025 நாள் : ௦௨ - ௦௨ - ௨௦௨௫
மதுரை தமிழ்ச்சங்கத்தின் வாயிலில் அன்றும் சொல்லொணாத கூட்டம். நீற்றொளி ஒளிர சங்கத்தின் மேடைகளில் மக்கள் கூட்டம். புலவர்கள் பலர் அவர்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தும் சுற்றியிருந்த மண்டபங்களில் அமர்ந்தும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். பொருள்பொதிந்த சொற்களின் ஒலிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலந்து பொருளற்ற ஒற்றை ஒலியாக மாறி அனைவரையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது.
திருநீறும் அக்கமணியும் துளங்க செம்பட்டு உடுத்தி அறிவொளி பாயும் கண்களுடன் ஒருவர் மண்டபத்துக்குள் உள்நுழைந்தார். சங்கத்தின் தலைமைப் புலவர் அவர் என்பதை முன்னால் வந்த காவலனின் சொற்களால் புதியவர்கள் அறிந்தனர். அவரைத் தொடர்ந்து வெண்தாடியும் கருந்தாடியுமாக சிலர் வந்தனர். வந்தவர்கள் மண்டபத்தின் கல்மேடையில் இடப்பட்டிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தனர். எப்பொழுதும் இருக்கும் உற்சாகம் அவர்களின் முகத்தில் அன்று குறைந்திருந்தது. தலைமைப் புலவரின் வருகை அவையைச் சட்டென ஒலியற்றதாக்கியது. திடீரெனத் தோன்றிய அமைதி அனைவருடைய காதுகளையும் அடைத்து நின்றது.
தலைமைப் புலவர் தறிநாடா அசைவுபோல இடவலமாகத் திரும்பித் திரும்பி அங்கிருந்தவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு பகுதியிலிருந்த மக்களின் ஆராவாரம் அதிகரித்தது. மக்கள் திரள் ஒதுங்கி வழிகொடுக்க வெள்ளுடையும் மயிற்பீலியும் தோளில் சுவடிப் பொதியுமாக திருத்தக்கதேவர் வந்தார். அவருக்கான இருக்கையை தலைமைப் புலவர் ஓதுக்கிக் கொடுத்தார். சில புலவர்கள் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். பதில் வணக்கம் தெரிவித்தவர் தனக்கான இருக்கையில் அமர்ந்தார். சுவடிக்கட்டுகள் அங்கிருந்த மேசை மீது அடுக்கி வைக்கப்பட்டது.
தலைமைப் புலவர் எழுந்து அவையை வணங்கினார். மீண்டும் அவை ஒலியற்றதானது. “தமிழாயும் புலவர்களே! சான்றோர்களே! தமிழ்ச்சங்கத்து அன்பர்களே! மதுரைவாழ் பெருமக்களே! அனைவரையும் சங்கத்தின் சார்பாக வரவேற்கிறேன். சில நாட்களுக்கு முன் திருத்தக்கதேவர் இந்த அவைக்கு வந்திருந்த பொழுது நடந்தவை அனைத்தும் அனைவரும் அறிந்ததே. சமணரான திருத்தக்கதேவர் காப்பியம் ஒன்று இயற்றி வந்திருக்கிறார். அது இப்பொழுது இங்கு அரங்கேற்றுவதற்குத் தயாராக இருக்கிறது. தமிழ்ப் புலவர்கள் முன்னிலையில் அந்நூலை திருத்தக்கதேவர் அரங்கேற்றுவார். அவையோர் அந்நூலை அங்கிகரித்தால் அது தமிழ்ச் சமூகத்தின் வாசிப்புக்குச் செல்லும். இப்பொழுது திருத்தக்கதேவர் தனது நூலை அரங்கேற்றலாம். வணக்கம்” என்று சொல்லி கரங்கூப்பினார். அவரது பார்வை திருத்தக்கதேவரைத் தீண்டியது.
உடலைச் சுற்றிப் போர்த்தப்பட்டிருந்த வெள்ளைவேட்டி எழுந்து நின்றதும் ஒரு பக்கமாகச் சரிந்துவிழுந்தது. அதை மீண்டும் தோள்மீது எடுத்துப் போர்த்துக் கொண்டு கைகூப்பியவாறு அவை முழுவதையும் சுற்றிப் பார்த்தார். காமனைக் காய்ந்த கண்ணுதல் பெருமானின் சிற்பமமைந்த தூணருகே அமர்ந்திருந்த மாதேவனாரைக் கண்டு புன்முறுவல் பூத்தார்.
“தமிழ்ச்சங்கத்துத் தலைமைப் புலவர் பெருமகனாருக்கு என் வணக்கம். அவையில் கூடியுள்ள அனைவரையும் வணங்கிக் கொள்கிறேன். சமண சமயத்தைக் கடைபித்து ஒழுகும் நான் தமிழ்ச்சுவை பருக இங்கு வந்தேன். காலம் என் மூலமாக தமிழ்க்காப்பியம் ஒன்றை இயற்றச் செய்திருக்கிறது. இப்பெருவாய்ப்பை இச்சங்கமே எனக்கு வழங்கியது. அதனால் சங்கத்தை மீண்டும் வணங்கிக் கொள்கிறேன்.”
தலைமைப் புலவர் தனக்கு வலப்புறம் அமர்ந்திருந்த காரியாரைப் பார்த்தார். காரியார் எழுந்து ஓரடி முன்வந்துநின்று பேசினார். “தேவரே! தாங்கள் தமிழ்க்காப்பியம் இயற்றி வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. முதலில் உங்கள் காப்பியத்தை சுருக்கமாக அறிமுகம் செய்யுங்களேன்.”
“நல்லது” என்றவர் அவைமுன் வந்து நின்றார்.
“எங்கள் சமயத்தில் வழிவழியாகச் சொல்லப்படும் கதையொன்றையே தமிழ்க் காப்பிய மரபிற்கேற்ப நூலாக்கியிருக்கிறேன். சீவகசாமியின் வாழ்வே இதன் மையப் பொருள். அவர் பிறந்தது முதல் வீடுபெற்றது வரையுள்ள கதையை இது கூறுகிறது. அதனால் சீவக சிந்தாமணி என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.”
“சீவகசிந்தாமணி வாழ்க!” என்று அவையிலிருந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது. பல குரல்களாக அது வளர்ந்து ஓய்ந்தது.
“தேவரே! தங்கள் நூலின் அமைப்பு யாது?” என்றார் காரியார்.
“நாமகள் இலம்பகம் தொடங்கி முத்தி இலம்பகம் ஈறாக பதின்மூன்று இலம்பகங்காக இந்நூல் அமைந்துள்ளது. ஒவ்வொரு இலம்பகங்களுக்கும் அவ்வவ்விலம்பகங்களின் கதைப் போக்கின்படி பெயரிடப்பட்டுள்ளது.”
“யாப்பு?”
“விருத்தப்பா”
“பாடல் எண்ணிக்கை?”
“3145 விருத்தப்பாடல்கள்”
“பழந்தமிழ் இலக்கண, இலக்கிய முறைப்படி இந்நூல் அமைக்கப்பட்டுள்ளதா?”
“தங்கள் வினாவைப் புரிந்துகொள்கிறேன் புலவரே. இது உறுதியாக நற்றமிழ் இலக்கண இலக்கிய மரபையும் சமணக் கொள்கைகளையும் பின்பற்றி எழுதப்பட்டுள்ள நூல்தான்.”
“சான்று?”
“‘அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபெனாஅப் பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ’ என்று தொல்காப்பியர் கூறும் செய்யுளுறுப்புகள் பொருந்தவே இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. அதில் தொன்மை என்னும் வனப்பு இந்நூற்கு மிகப் பொருந்தி வருவதைக் காணலாம். இங்ஙனம் நிறைய சான்றுகளைக் காட்டலாம்.”
காரியார் திருத்தக்கதேவரின் பதிலால் மிக மகிழ்ந்தார். திருத்தக்கதேவரின் தமிழறிவும் உடனுக்குடன் செவ்வனே பதிலிறுக்கும் திறனும் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டார். அதனை அவர் அடக்கமுயன்றும் கடைவாயில் வெளிப்பட்ட புன்முறுவல் காட்டிக் கொடுத்தது. “திருத்தக்கதேவரே! தாங்கள் தங்கள் நூலைத் தொடங்கலாம்” என்று சொல்லி அமர்ந்தார்.
திருத்தக்கதேவர் தலைமைப் புலவரையும் அவையையும் வணங்கினார். மேசைமீதிருந்த சுவடிக்கட்டுகளுள் ஒன்றை எடுத்தார். கண்மூடி நின்றார். அவையும் அவரைப் போலவே அமைதிகாத்தது. விழிதிறந்தவர் முதற்பாடலைப் படித்தார். தொடர்ந்து தனது ஆசிரியர் ஆசியாக எழுதிக் கொடுத்த பாடலைப் படித்தார். அவை அவரது பாடல்களை எங்ஙனம் கேட்கிறது என்பதைத் தலைமைப் புலவர் கண்ணோட்டமிட்டார். அவை ஆர்வத்துடன் கேட்பது அவருள் படபடப்பை ஏற்படுத்தியது.
இரண்டு பாடல்களில் அருகசரணம் சொல்லியவர் மூன்றாம் பாடலைப் படித்தார்.
“பல்மாண் குணங்கட்கு இடனாய்ப்பகை நண்பொடு இல்லான்
தொல்மாண்பு அமைந்த புனைநல்லறம் துன்னி நின்ற
சொல்மாண்பு அமைந்த குழுவின்சரண் சென்று தொக்க
நல்மாண்பு பெற்றேன் இதுநாட்டுதல் மாண்பு பெற்றேன்”
“தமிழ்ப்பெருமக்களே! சாது சரணமும் தன்ம சரணமும் இப்பாடலில் கூறப்பட்டுள்ளது. அறத்தினையும் அதனைப் பொருந்தி நின்ற புகழ்சிறந்த சாதுக்களின் குழுவினையும் புகலாகச் சென்று சேர்ந்த நல்வினையுடையேன். ஆதலின் இக்கதையை உலகில் நிலைபெறுத்துதற்குரிய நல்வினையுடையேனானேன்” என்று சொல்லும்பொழுது அவரது கண்கள் கலங்கியிருந்தன. சமணசமயக் கொள்கையின் மீதும் சமண முன்னோடிகளின் மீது அவருக்கிருந்த பக்தியை அவை கண்டுகொண்டது.
பவளமும் சங்கும் முத்தும் கடலிலே பிறந்தன. அக்கடல் நீர் உவர்ப்பாக இருந்தாலும் அப்பொருள்களைக் கைவிடுவார் ஒருவருமிலர். அதுபோல் மெய்யான பழம் பொருளாலே வீடுபெறுவோம் என்று நினைப்பவர், உவர்க்கும் என்னுடைய இம்மொழிகள் தீயவாயினும் அச்சொற்களிற் பொதிந்த பொருள்களின் பயன்நோக்கி ஏற்றுக் கொள்வார்கள் என்று அவையடக்கச் செய்யுட்களைச் சொல்லி வணங்கினார் திருத்தக்கதேவர். அவை மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது.
தொடர்ந்து பதிகச் செய்யுட்களைச் சொல்லி விளக்கமும் அளித்தார். பதிகத்தினால் சீவகசிந்தாமணியின் கதை உள்ளடக்கத்தை சுருக்கமாக விளக்கிக் காட்டினார். அவை சீவகனின் கதையால் கட்டுண்டு நின்றிருந்தது. தலைமைப் புலவர் எழுந்து நின்றார். “திருத்தக்கதேவரே தாங்கள் கூறிய விளக்கமும் வாழ்த்தும் அவையடக்கமும் பதிகப்பாடல்களும் எங்களை மகிழ்வித்தன. இன்றைய அரங்கேற்றத்தை இத்துடன் நிறைவுசெய்து கொள்வோம். நாளை மீண்டும் இவ்வவையில் கூடுவோம். அனைவருக்கும் வணக்கம்” என்று சொல்லி அவையிலிருந்து விரைவாக வெளியேறிச் சொன்றார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களில் காரியார் மட்டும் செல்லாமல் அவையிலேயே நிற்பதை திருத்தக்கதேவர் மட்டுமே கவனித்திருந்தார்.
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
மிகச் சிறப்பு. தங்களின் தமிழ் சொல்லாடல் மருட்கையின் வெளிப்பாடு
ReplyDelete