இதழ் - 140 இதழ் - ௧௪௦
நாள் : 29 - 12 - 2024 நாள் : ௨௯ - ௧௨ - ௨௦௨௪
யானைமலையின் வெப்பம் மலையேறிக் கொண்டிருந்த திருத்தக்கதேவரின் முகத்தில் வியர்வையாய் அரும்பிக் கொண்டிருந்தது. மலையேறிப் பழக்கமிருந்தாலும் உள்ளத்தில் ஏறியிருந்த பாரம் அவரது மூச்சுக்காற்றின் வேகத்தை மிகுவித்திருந்தது. பாறையே மலையாய் யானைபோல் அமர்ந்திருந்தது. ஆங்காங்கே புதர்கள் மண்டியிருந்தன. தொகுதி தொகுதியாய்ப் படர்ந்திருந்த புதர்களுக்கு நடுவில் ஒற்றையடிப்பாதை நெளிந்து நெளிந்து சென்றது. உச்சியை நெருங்கிக் கொண்டிருந்த திருத்தக்கதேவருக்கு குகையொன்று கண்ணில்பட்டது. அவரது நடை வேகமெடுத்தது. உருள்வடிவப் பெரும்பாறையில் கைவைத்து சற்று நின்று மூச்சு வாங்கினார். அங்கிருந்து பார்த்தபோது குகைவாயிலில் ஒருவர் அமர்ந்து மற்றவர்களிடம் ஏதோ உரையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. மீண்டும் நடக்கத் தொடங்கினார்.
குகைவாயிலில் ஒல்லியான தேகக்கட்டுடன் ஒருவர் சித்தாசனத்தில் அமர்ந்திருந்தார். உடலின் உறுதியை அவர் அமர்ந்திருந்தவிதம் வெளிக்காட்டியது. அவரது கைகளின் அசைவு மென்மையாயிருந்தது. தனது ஆசிரியர்தான் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை அந்த அசைவு திருத்தக்கதேவருக்குக் காட்டியது. குகைவாயிலை அடைந்தவர் ஆசிரியர் கண்களில் படுபடியாகச் சற்று தொலைவிலேயே நின்றார். தனது மாணவரின் வருகையை ஆசிரியரும் கண்டார். சீடர்களின் ஐயங்களைத் தெளிவித்துவிட்டு அவர்களை அனுப்பினார்.
திருத்தக்கதேவர் தனது குண்டிகையையும் மயிற்பீலித் தொகையையும் ஒருபக்கமாக வைத்துவிட்டு ஆசிரியரின் திருவடி பணிந்து எழுந்தார்.
“வணங்குகிறேன் ஐயனே!”
“திருத்தக்கதேவரே! வாருங்கள். மதுரை தமிழ்ச் சங்கம் சென்றிருந்தீர்களே. பயணம் எப்படியிருந்தது? தங்கி வருவதாகச் சொன்னீர்களே, விரைவாக வந்துவிட்டீர்கள்?”
“விரைவாக வரவேண்டிய சூழல் உருவாகிவிட்டது ஐயா. தங்கள் அனுமதிவேண்டி இங்கு வந்தேன்.”
“அனுமதியா? எதற்காக?”
திருத்தக்கதேவர் சங்கத்தில் நடைபெற்றதை ஆசிரியரிடம் தெரிவித்தார். “சங்கத்தில் சமணர்களின் தமிழ்ப் புலமையை எள்ளி நகையாடியதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை ஐயா. அதனால்தான் சங்கத்தில் இச்சொல்லை அளித்துவரும்படியாகிவிட்டது. தங்கள் ஆனுமதியும் அருளுமின்றி அடியேன் இச்செயலில் வெற்றிபெறவியலாது ஐயா.”
“ஊழிற் பெருவலி யாவுள… திருத்தக்கதேவரே! கவலற்க. எல்லாம் நன்மைக்கே. உங்கள் வழியாக சமணமும் தமிழும் மேலும் ஒளிரப்போகிறது. காப்பியம் பாட எந்தக் கதையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?”
“நமது சமணத்திலுள்ள சீவகனின் கதையைக் காப்பியமாக்கலாம் என்று நினைக்கிறேன் ஐயா.”
“நல்லது. நன்றாகச் செய்யலாம்.”
“ஐயா! ஆசிரியப்பாவில்தான் இதுகாறும் தோன்றிய காப்பியங்கள் பாடப்பட்டுள்ளன. அடியேன் புதிதாக விருத்தத்தில் காப்பியம் பாடலாம் என்றுள்ளேன்.”
“சிறப்பு. காப்பியம் பாட விருத்தம் நல்ல தேர்வு. ஆனால் அதை சற்று சோதித்துப் பார்த்துக் கொள்வது நல்லது” என்ற ஆசிரியர் சித்தாசனத்திலிருந்து எழுந்து நின்றார்.
“ஆணை ஐயா” என்று பணிந்தார் திருத்தக்கதேவர்.
“ஏதேனும் ஒரு பொருண்மையில் சிறுகாப்பியத்தை விருத்தத்தில் பாடிக் காட்டலாமே.”
“எப்பொருள் குறித்து பாடவேண்டும் என்றும் தாங்களே ஆணையிட வேண்டும்.”
ஆசிரியரும் மாணவரும் பேசிக்கொண்டே அங்கிருந்த புதரொன்றின் பக்கமாக வந்துநின்றனர். மாணவருக்கான பாடற்பொருள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர். மனிதர்களின் நடமாட்டம் உணர்ந்த நரியொன்று புதர் மறைவிலிருந்து பாய்ந்தோடியது. ஆசிரியர் மென்னகை புரிந்தார்.
“திருத்தக்கதேவரே! அதோ ஒரு நரி ஓடுகிறதே. அதையே மையப்பொருளாகக் கொண்டு ஒரு விருத்தம் பாடுங்கள்”
“ஆணை” என்று பணிந்தார் திருத்தக்கதேவர்.
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
சிறப்பு
ReplyDeleteசிறந்த பதிவு
ReplyDelete