பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

  

இதழ் – 9                                                                         இதழ் – ௯
நாள் – 26-06-2022                                                         நாள் – உ௬.௬.௨௰உஉ

 

1. விருதுநகர் – விருதுப்பட்டி
 

     ஒரு போர் வீரன் பல இராஜ்ஜியங்களைக் கைப்பற்றி, பல விருதுகளை பெற்றிருந்தான். அவன் இந்த ஊருக்கு வந்து குடியிருப்பாளர்களுக்குச் சவால் விடுத்தான். இப்பகுதியில் வசித்து வந்த ஒருவன் அவன் சவாலை ஏற்றுக்கொண்டு, அவ்வீரனோடு போரிட்டு, அவனைக் கொன்று, அவன் வைத்திருந்த விருதுகளைக் கைப்பற்றினார். இவ்வாறு அவன் பெற்ற விருதுகள் யாவும், விருதுநகரை சார்ந்த வீரரால் வெற்றி பெற்றமையால், இதனை “விருதுகள் வெட்டி” என்று கூறப்பட்டது. 1875க்குப் பின்னா் அப்பெயா் மாறி விருதுப்பட்டி என அழைக்கப்பட்டது. அப்பெயரும் காலமாற்றத்தால் மருவி விருதுநகா் ஆயிற்று.
 
 
2. தென்காசி – தென்காசி கோபுரம்
 
 
 
     பராகிராம பாண்டிய மன்னன் தென்காசியை ஆட்சி செய்தான். அவர் கனவில் சிவபெருமான் தோன்றி, தெற்கில் உள்ள என்னுடைய பக்தர்கள் சிலர், வடக்கில் உள்ள காசிக்குப் பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்து விடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தைக் கட்டுமாறு ஆணையிட்டுள்ளார். அதனை ஏற்று பராகிரமபாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம் ஆகும். நாளடைவில் இந்தக் கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
 
 
3. இராமநாதபுரம் – முகவை
 
 
 
     இந்தப் பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்று பொருள். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் இராம்நாடு என அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய இராமநாதபுரம் என்று  வழங்கலாயிற்று.
 
 
4. நீலகிரி – நீலமலை
 
 
 
     தொல்காப்பியத்தில், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என அழைக்கப்படுகிறது. காரணம், குறிஞ்சிச் செடிகள் மலைப் பகுதிகளில் மட்டுமே பரவலாக வளரக்கூடியவை. மேற்குத்தொடர்ச்சி மலையும் கிழக்குத்தொடர்ச்சி மலையும் இணையும் பகுதி நீலகிரி. இங்கு நீலக்குறிஞ்சி மலர்கள் பரவலாக மலர்ந்து,  அவ்விடமே நீலநிறமாக இருந்ததால்  இப்பகுதிக்கு நீலகிரி என்று பெயர் வந்தது.  நீலம் – நீலநிறம், கிரி - மலை (Nilgiri Mountains). இது மலைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.
 
 
5. திருப்பூர்– திருப்போர் 
 
     சோழன் செங்கண்ணனுக்கும் சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் இங்கு போர் நடந்தது. இரும்பொறை மிகப் பெரிய வீரனாக இருந்தாலும் அந்தப் போரில் சோழன் வெற்றி பெற்றான். சேரனை சிறைப் பிடித்தான். போர் தர்மப்படி கைது செய்யப்படும் மன்னனுக்குச் சில மரியாதைகள் தரப்பட வேண்டும். ஆனால், இரும்பொறையைச் சிறையில் அவமதிக்கிறார்கள். மானமே பெரிது என நினைத்த அவன் உண்ணாமல், உறங்காமல் தன்னையே வருத்திக்கொண்டு உயிர்த் துறந்தான். மானத்துக்காக சேரன் உயிர்விட்ட பெருமை மிகு இடம் என்பதால் இவ்வூரை, 'திரு’ப்போர் என்று அழைத்தனர். அந்தத் திருப் போர்தான் மருவி இன்று திருப்பூர் என்று அழைக்கப்படுகிறது.
 
     மகாபாரத்தில் வரும் கௌரவர்கள், பாண்டவர்களின் மாடுகளைத் திருடிச் சென்றுவிடுகிறார்கள். அந்த மாடுகளை மீண்டும் பாண்டவர்கள் வெற்றிகரமாக மீட்டுத் திரும்பிய ஊர் என்பதால், திருப்பூர் என்று பெயர் வந்தாக அந்த ஸ்தல புராணம் குறிப்பிடுகிறது.


( தொடர்ந்து அறிவோம் . . . )

முனைவர் இரா. ஆனந்த் 
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

1 comment:

  1. நீலமலை மிகப் பொருத்தமாக உள்ளது

    ReplyDelete