இதழ் - 113 இதழ் - ௧௧௩
நாள் : 23 - 06 - 2024 நாள் : ௨௩ - 0௬ - ௨௦௨௪
அரங்கேற்று காதை
அரங்கேற்றம்… இந்தச் சொல்லை இன்று நாம் அனைவரும் பரவலாகக் கேட்கிறோம். எனது குழந்தையின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது, பள்ளியில் நாடக அரங்கேற்றம் நடைபெறவுள்ளது போன்ற பேச்சுகள் இன்று பொதுவழக்கில் வந்துவிட்டதைக் காண்கிறோம். இதே போல ‘நூல் அரங்கேற்றம்’ என்ற வழக்கமும் உண்டு. இன்றல்ல… சில நூறாண்டுகளுக்கு முன்பிருந்த வழக்கம்.
இன்று நூலாசிரியர் ஒருவர் தனது நூலை அச்சகத்தில் அச்சிட்டு எளிதாக சமூகத்தில் கொண்டு சேர்க்க இயலும். ஆனால் முற்காலத்தில் அங்ஙனம் இல்லை. நூலாசிரியர் தான் இயற்றிய நூலை அறிஞர்குழு முன்னிலையில் சொல்லி பொருள் விளக்க வேண்டும். அதில் சொற்குற்றம், பொருட்குற்றம் இல்லை என்று அறிஞர்குழு சான்றளித்தால் மட்டுமே அந்நூல் சமூகத்திற்குச் சென்று சேரும். அங்கீகாரமும் புகழும் எய்தும். இதனை நூல் அரங்கேற்றம் என்பர். இத்தகைய நூல் அரங்கேற்றம் குறித்த பல குறிப்புகள் நமது இலக்கிய வரலாற்றில் நிரம்ப உள்ளன. குறிப்பாகப் புராண அரங்கேற்றங்களில் நினைந்து வியக்கத்தக்க நிகழ்வுகள் பல நடந்துள்ளன. அவற்றுள் ஒருசிலவற்றை அறிமுகம் செய்துகொள்வது தமிழ்ச்சுவையை நம் மக்களிடம் ஏற்படுத்தும் என்பதே இத்தொடரின் நோக்கம்.
சிவபெருமானின் மூன்று கண்களோடு ஒப்பிட்டு மூன்று புராணங்கள் பேசப்படுகின்றன. சிவபெருமானின் வலக்கண்ணாக சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமும், இடக்கண்ணாக பரஞ்சோதியார் இயற்றிய திருவிளையாடற் புராணமும், நெற்றிக்கண்ணாக கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணமும் கொள்ளப்படுகின்றன. சிவபெருமானின் நுதல்விழி வழி தோன்றிய முருகக்கடவுளின் சரிதத்தைக் கூறும் கந்தபுராணம் சிவபெருமானின் நெற்றிக்கண்ணாகக் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. கந்தபுராண அரங்கேற்றமும் அதில் முருகக்கடவுள் நிகழ்த்திய தமிழாடலும் தமிழ்மக்கள் நினைந்து இன்புறத்தக்கன.
காஞ்சிபுரம் கல்வியிற் சிறந்தது… சான்றோர் உடையது… கோயில்கள் நிறைந்தது… தத்துவம் செறிந்தது… நகரங்களுள் சிறந்தது… அத்தகைய காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதருக்கும் அன்னை காமாட்சிக்கும் நடுவில் கோயில் கொண்டு முருகக்கடவுள் அருள்பாலிக்கிறார். அக்கோயிலுக்கு ‘குமரக்கோட்டம்’ என்று பெயர். முருகக்கடவுளுக்கு பூசனை புரியும் மரபில் வந்த காளத்தியப்ப சிவாச்சாரியார் என்பவர் குமரக்கோட்டத்தில் அர்ச்சகராக இருந்தார். அவருக்கு குமரக்கோட்டத்து முருகக்கடவுளின் அருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு கச்சியப்பர் என்று பெயரிட்டு, உரிய பருவத்தில் கல்வி கேள்வி அளித்து வளர்த்தார். காளத்தியப்பருக்குப் பிறகு குமரக்கோட்டத்துப் பூசனைமுறை கச்சியப்பரிடம் வந்தது. இயல்பாகவே முருகக்கடவுளிடம் அன்புவயப்பட்ட கச்சியப்பர் குமரக்கோட்டத்து இறைவனை நெஞ்சு நெக்குருக பூசித்தார். காலம் சென்றது.
ஒருநாள் கச்சியப்பரின் கனவில் முருகக்கடவுள் காட்சியளித்து “நமது சரிதத்தை நற்றமிழில் பாடுக” என்று சொல்லி “திகடசக் கரச் செம்முகம் ஐந்துளான்” என்று பாடுதற்குரிய முதலடியையும் எடுத்தருளி மறைந்தார். விழித்தெழுந்த கச்சியப்பர் முருகக்கடவுளின் அருளை நினைந்துருகினார். அன்றுதொட்டு நாள்தோறும் நூறுபாடல்களைப் பாடலானார். அதிலும் ஓர் அற்புதம் நிகழ்ந்து. நாள்தோறும் நூறு பாடல்களைப் பாடி அவ்வேட்டுச் சுவடிகளை குமரக்கோட்டத்து இறைவன் திருவடிகளில் வைத்துவிட்டுக் கோயிலைப் பூட்டிச் சென்றுவிடுவார். மறுநாள் காலை வந்து ஏடுகளை எடுத்து மேற்கொண்டு எழுதத் தொடங்கும்பொழுது முன்பு எழுதியிருந்த பாடல்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இது முருகக்கடவுளின் கருணைச் செயல் என்று உள்ளுணர்ந்து மகிழ்ந்தார். தமிழ்க்கடவுளான முருகனே தனது சரிதத்தைத் தமிழில் எழுதிக் கொண்டான் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறு கந்தபுராணம் பத்தாயிரத்து முந்நூற்று நாற்பத்தைந்து பாடல்கள் கொண்ட நூலாக நிறைவுபெற்றது.
இனி அன்றைய வழக்கப்படி அறிஞர்குழு முன்னிலையில் நூல் அரங்கேற்றப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் ஆயிற்று. ஒரு நல்ல நாளில் குமரக்கோட்டத்து முருகக்கடவுளின் திருமுன் மண்டபத்தில் அரங்கேற்றம் ஏற்பாடாகியது. பல்வேறு ஊர்களிலிருந்து தமிழறிஞர்களும் சைவ அறிஞர்களும் முருகக்கடவுளிடத்து பக்திகொண்டோரும் வந்து குழுமியிருந்தனர். கச்சியப்பர் தனது கம்பீரமான குரலில் “திகடசக் கரச் செம்முகம் ஐந்துளான்” என்று தொடங்கி முதற்செய்யுளைச் சொல்லி அதற்கு “திகழ் தசக்கரச் செம்முகம் ஐந்துளான்” என்று பதம் பிரித்துப் பொருள் விளக்கினார். அதாவது ‘பத்துக் கரங்களும் ஐந்து முகங்களும் உடைய சிவபெருமான்’ என்று பொருள் கூறினார். நிரம்பியிருந்த அவையிலிருந்து ஒருவர் எழுந்து தனக்கு ஓர் ஐயமுள்ளது. என்றார். இதுதான் அரங்கேற்றத்தின் வழக்கம். இன்றைய முனைவர்பட்ட வாய்மொழித் தேர்வுகள் போல் என்று சொல்லலாம். அவையோர் எழுப்பும் ஐயங்களுக்கும் வினாக்களுக்கும் தக்க விடையை நூலாசிரியர் சொல்லியாக வேண்டும். இல்லையேல் அரங்கேற்றம் நிறுத்தப்படும். நூல் ஏற்றுக்கொள்ளப்படாது; சமூகத்தைச் சென்றடையாது.
முதற்பாடலைச் சொன்னவுடனேயே அவையிலிருந்த புலவர் ஒருவர் தனக்கு ஐயமொன்றுள்ளது என்றார். கச்சியப்பரும் அவையினரும் அவரைக் கூர்ந்து பார்த்தனர். “ஐயம் யாதென்றாலும் கேட்கலாம்” என்றார் கச்சியப்பர். “திகழ்தசம் என்பதை திகடசம் என்று புணர்த்து தாங்கள் முதற்செய்யுளின் முதற்சொல்லை அமைத்திருக்கிறீர்கள். திகழ்தசம் – திகடசம் என்று புணர்வதற்குத் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களில் விதியிருப்பதாகத் தோன்றவில்லை. தாங்கள் எவ்விதிப்படி இச்சொல்லை அமைத்தீர்” என்றார். கச்சியப்பர் சிலநொடிகள் கண்மூடி நிதானித்தார். பின்னர் “ஐயா, தாங்கள் சொல்வது சரியே! இது என் நெஞ்சுதித்த சொல்லல்ல. நான் அன்றாடம் வழிபடும் குமரக்கோட்டத்து முருகக்கடவுள் அருளிய சொல். இதற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும்” என்றார். “தாங்கள் கூறியது தங்கள் உள்ளம் மட்டுமே அறிந்தது. அதை நாங்கள் எங்ஙனம் ஏற்க முடியும். ஒன்று இலக்கண நூல்களில் விதி காட்டுங்கள். அல்லது தாங்கள் கூறியது போல் முருகக்கடவுளே இங்கு வந்து பதில் சொல்ல வேண்டும். அதுவரை அரங்கேற்றம் நிகழமுடியாது” என்றார். கச்சியப்பருக்கு யாது செய்வது என்று தோன்றவில்லை. “நாளை அவ்வாறே செய்விப்போம்” என்று சொல்லி அரங்கேற்றத்தை நிறுத்திக் கொண்டார்.
கந்தபுராண அரங்கேற்றம் முதற்பாடலுடனே நின்றுவிட்டது, அப்பாடலும் முழுமையாகச் சொல்லப்படவில்லை என்பது கச்சியப்பரைப் பெரிதும் வருத்தியது. அவரது உள்ளம் குமரக்கோட்டத்தை நாடியது. குமரக்கோட்டம் சென்று முருகப்பெருமானை வேண்டினார். அப்படியே உறங்கிப்போனார். அவரது கனவில்வந்த முருகக்கடவுள் “நாளை அவைக்கு வரும் புலவன் ஒருவன் இதற்கு பதிலளிப்பான்” என்று சொல்லி மறைந்தார்.
மறுநாள் அவை கூடியது. கச்சியப்பர் என்ன பதில்சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். அவரோ கண்கள் மூடியவண்ணம் முருகக்கடவுளையே தியானித்துக் கொண்டிருந்தார். திடீரென கண்களைத் திறந்து முருகக்கடவுள் தனது கனவில் தோன்றி கூறியதை அவைக்கு வெளிப்படுத்தினார். அப்பொழுது ஒரு புலவர் அவைமுன் வந்தார். “தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றது அவை. ‘நான் சோழநாட்டுப் புலவன். கச்சியப்பரிடம் கேட்கப்பட்ட ஐயத்தை நான் தெளிவிக்கிறேன். திகழ் தசம் என்ற சொற்கள் புணர்ந்து திகடசம் என்றாவதற்கு புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியத்தில் விதியுள்ளது. வீரசோழியத்தின் சந்திப்படலம் 18ஆவது பாடலில் அந்த விதி கூறப்பட்டுள்ளது. பாருங்கள்…” என்று சொல்லி தன் கையிலிருந்து ஏட்டுக்கட்டை அவைப்புலவர்களிடம் காண்பித்தார். தாங்கள் அறியாத விதியை அவைப்புலவர்கள் ஆர்வத்துடன் வாங்கிப்பார்த்தனர். விதியினைக் கண்டு ஐயம் தெளிந்தனர். “அனைவருக்கு ஐயம் நீங்கியதா?” என்று கேட்டவாறே சோழநாட்டுப் புலவர் மறைந்துபோனார். அனைவரும் வியந்தனர். கச்சியப்பருக்காக முருகக்கடவுளே தமிழ்ப்புலவராக வந்து இந்த அரங்கேற்றத்தை நடத்தியளித்துள்ளார் என்று அறிந்தனர். கச்சியப்பரை வணங்கி அரங்கேற்றத்தைத் தொடர அவைப்புலவர்கள் வேண்டினர். அரங்கேற்றம் மீண்டும் தொடங்கியது. 10345 பாடல்களும் முழுமையாக அரங்கேறின. நூல் சாலச்சிறப்புடையது என்று புலவர்களும் பக்திநனி சொட்டச் சொட்டப் பாடப்பட்டுள்ளது என்று முருகனடியார்களும் கொண்டாடினர். கச்சியப்பர் குமரக்கோட்டத்து முருகக்கடவுளை நினைந்து வாழ்ந்து உரியகாலம் வந்ததும் திருவடிப்பேறு எய்தினார்.
ஒரு செம்மையான நூல் அரங்கேறுவதற்குப் பல தடைகள் வந்தாலும் அவை இறையருளால் களையப்படும் என்பதை கந்தபுராண அரங்கேற்றம் உணர்த்துகிறது. அதுமட்டுமல்ல குற்றமுடைய அல்லது ஐயத்திற்கு இடமளிக்கும் நூல்கள் எவைவும் தமிழில் இருக்கக்கூடாது. அவை முன்னரே தெளியப்பட்டு செம்மையுடைய நூலாக சமூகத்திற்குச் சென்று சேர வேண்டும் என்ற அறிவார்ந்த பெருமக்களின் நினைப்பே அரங்கேற்றமாக ஒளிர்ந்தது எனலாம். நூலின் சிறப்பை அறிவியக்கத்திற்கும் பொதுமக்களுக்கும் கொண்டு சேர்க்கும் களமாக அரங்கேற்றம் விளங்கியுள்ளது. “மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வன போல் மாயா மற்றிவர் புகழ்கொண்டு செய்யும் உடம்பு” என்ற குமரகுருபரரின் நீதிநெறி விளக்கப் பாடலடிகளே இப்பொழுது நினைவில் எழுகிறது.
(அரங்கேற்றம் தொடரும்…)
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
சிறப்பு, அருமை
ReplyDeleteநல்ல தலைப்பு
வரும் கிழமைக்கான அரங்கேற்றத்துக்காக ஆவலுடன்.....