பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்


இதழ் - 7                                                                           இதழ் -   
நாள் : 12-6-2022                                                             நாள் : ௧௨--உஉ

 

 
 
 
1. கும்பகோணம் – குடந்தை, குடமூக்கு

     
 
     சோழ நாட்டில் புகழ் பெற்ற ஊராக இருந்துள்ளது. அக்காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்டுள்ளது. புராணங்களின்படி, அமிர்தம் இருக்கும் கூடத்தின் மூக்கு வழியே கீழே விழுந்த பரவிய ஊர் குடமூக்கு என்று பெயர் பெற்றது. பின்னாளில் கும்பகோணம் என்று மருவி வந்துள்ளது.
 
   குடமூக்கு என்னும் சொற்றொடர் கும்பகோணம் என மாறியது இடைக்காலத்தில் எனக் கொள்ளலாம். குடம் என்பதற்குக் கும்பம் என்னும் பெயருண்டு. கோணம் என்னும் சொல்லுக்குரிய பல பொருள்களுள் மூக்கு என்னும் பொருளும் அடங்கும். இவ்வாறு குடமூக்கு என்பதை கும்பகோணம் என ஆக்கிக்கொண்டார்கள்.

 
2. கன்னியாகுமரி – நாஞ்சில் நாடு

  
முன்பொரு காலத்தில் இப்பகுதி நாஞ்சில் நாடு, வேணாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி வயல்கள் சூழ்ந்த பகுதியாக அமைந்துள்ளது. நாஞ்சில் என்பதற்கு வயலை உழப் பயன்படும் கலப்பை என்று பொருள். அதனால் இது நாஞ்சில் நாடு எனப் பெயர் வந்துள்ளது.

     புராணங்களில், பார்வதிதேவி குமரி பகவதி என்ற பெயரில் சிவபெருமானை வழிபட்டு வந்தடைந்தாகச் சொல்லப்படுகிறது. குமரி பகவதி அம்மன் சிறு பெண்ணாக, கன்னிப்பெண்ணாக இருப்பதால் இந்த அம்மனின் பெயராலேயே இவ்வூர் கன்னியாகுமரி என்ற பெயரில் அமைந்து இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது.

 
3. திருநெல்வேலி – வேணுவனம்

    
 
     இப்பகுதி முன்னாளில் வேணுவனம் என்று அழைக்கப்பட்டுள்ளது. வேணு என்பதற்கு வடமொழியில் மூங்கில் என்று பொருள். இப்பகுதி பெரும்பாலும் மூங்கில் நிறைந்த வனம் என்பதால் இப்பெயரைக் கொண்டுள்ளது. மூங்கில் நெல் நிறைந்த பகுதி என்பதால் மூங்கில் நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால் நெல்வேலி என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அப்பெயர் மருவி திருநெல்வேலி ஆயிற்று.

    புராணங்களில் வேதபட்டர் என்ற சிவபக்தர், நெய்வேத்தியத்திற்கு உலர வைத்திருந்த நெல்மணிகளை மழையில் நனைய விடாமல் சிவபெருமான் வேலி போட்டு தடுத்ததால், இவ்விடத்திற்கு  திருநெல்வேலி என்று பெயர் வந்தது என்பர்.

 
4. காஞ்சிபுரம் – காஞ்சி

 
 
     "நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" எனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி. பழந்தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இப்பகுதியில் காஞ்சி மலர்கள் அதிகம் இருந்ததால் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் முக்கியத் தலைநகரமானது. பின்னாளில் காஞ்சிவரம் என்று அழைக்கப்பட்டு வந்து, காலப்போக்கில் அப்பெயர் மருவி இப்போது காஞ்சிபுரம் ஆயிற்று.

 
5. ஏற்காடு - ஏரிக்காடு

 
 
     சேலம் மாவட்டத்தில் ஏரியும் காடும் சேர்ந்த மலைப்பகுதி என்பதால் ஏரிக்காடு என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டது. பின்னாளில் இப்பெயர் மருவி ஏற்காடு என்று வழங்கப்பட்டு வருகிறது.



( தொடர்ந்து அறிவோம் . . . )
 

முனைவர் இரா. ஆனந்த் 

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
 
 
 

1 comment:

  1. வேணுவனம் புதிய விடயம்
    நன்றி

    ReplyDelete