பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 91                                                                                                 இதழ் - 
நாள் : 21-01-2024                                                                                 நாள் : -0-௨௦௨

 
பல, சில புணர்ச்சி

பல, சில புணர்ச்சி
  • பல, சில என்னும் சொற்களுக்கு முன் அதே சொற்கள் வந்து புணரும் போது இயல்பாக அப்படியே வருதல் உண்டு. வல்லினம் மிகுந்து வருதலும் உண்டு.
சான்று (இயல்பாக)
  • பல + பல = பலபல
  • சில + சில = சிலசில
சான்று (வல்லினம் மிகும்போது)
  • பல + பல = பலப்பல
  • சில + சில = சிலச்சில

அகரம் ஏக “ல“கரம் “ற“கரம் ஆகலும்
  • நிலைமொழி இறுதியில் உள்ள அகரம் கெட எஞ்சி நிற்கும் லகரம் றகரமாகத் திரிந்து புணரும்.
சான்று
  • பல + பல - ப(ல் + அ) + பல = பற்பல
  • சில + சில - சி(ல் + அ) + சில = சிற்சில

    பல மற்றும் சில ஆகிய சொற்களின் பின் வேறு சொற்கள் வந்தால் இயல்பாகவும் புணரும் நிலைமொழி ஈற்று அகரம் கெட்டு புணர்வதும் உண்டு.

சான்று (இயல்பாக)
  •  பல + கலை = பலகலை
  •  சில + வளை = சிலவளை
சான்று
  • பல + கலை = பல்கலை
  • சில + வளை = சில்வளை
என நிலைமொழி ஈற்று அகரம் நீக்கப்பட்டும் வரும். 
        "பிறவரின் அகரம் விகற்பம் ஆகலும் உளபிற"
    பல சில என்னும் சொற்கள் முன் பிற சொற்கள் வந்து புணரின் நிலைமொழி இறுதி அகரம் கெட்டும் புணரும்: கெடாமலும் புணரும்.

சான்று
  • பல + மலர் = பன்மலர்
  • சில + அணி = சில்லணி
  • பல + நலம் = பன்னலம்
  • பல +  நாடு = பன்னாடு
        “பல சில எனுமிவை தம்முன் தாம்வரின்
        இயல்பும் மிகலும் அகரம் ஏக
        லகரம் றகரம் ஆகலும் பிறவரின்
        அகரம் விகற்பம் ஆகலும் உளபிற” 
                                     - நன்னூல். நூற்பா. எண் 170

     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் மேலும் அறியலாம்...
 
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020

1 comment: