பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

 

இதழ் - 8                                                                    இதழ் -   
நாள் : 19-6-2022                                                      நாள் : ௧௯ -௦௬- ௨௦௨௨
 

 
1. கடலூர் – கடம்பூர், திருப்பாதிரிப்புலியூர்

 
     பழங்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதி நீரோட்டமுள்ள கரைகளால் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் கடம்ப மரம் செழித்து வளரும். அதன் காரணமாக கடம்பூர் என்று அழைக்கப்பட்டது.
 
     இம்மாவட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயரும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பெயரை உச்சரிக்க அவர்களுக்கு கடினமாக இருந்ததால் இவ்வூருக்கு 'கடலூர்' என பெயரிட்டனர்.

 
2. திருவள்ளூர் - திரிவல்லூரு


     செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. முதலில் திருவல்லூரு என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. பின்னர் மக்கள் திரிவல்லூர் மற்றும் திருவள்ளூர் போன்ற பெயர்களால் குறிப்பிட்டனர்.


3. திருவண்ணாமலை - அண்ணாமலை

 
     திருவண்ணாமலை கோயிலில் உள்ள இறைவன் பெயர் அண்ணாமலை. சிவபெருமான் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயின் வடியில் இங்குள்ளார் என்பது ஐதீகம். பிரம்மன் - விஷ்ணு இருவரும் தாமே பரம்பொருள் எனச் செருக்கு கொண்டபோது சிவபெருமான் நெருப்புத்தூண் வடிவில் தோன்றியதாகவும் அந்தத் தூணே 'திருவண்ணாமலை' என்றும் கூறப்படுகிறது.

     பண்டைய காலத்தில் அண்ணாமலை என்பது அடையமுடியாத மலை என்று பொருள்கொள்ளத்தக்கதாய் இருந்தது. பின்பு இம்மலையின் புனிதத்தன்மையினால் இப்பெயருடன் “திரு” என்ற அடைமொழி முன்னொட்டாக சேர்த்து திருவண்ணாமலை என்று வழங்கப்படுகிறது. அண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது.


4. வேலூர்

     தமிழில் வேல் என்ற சொல் முருகப்பெருமானின் ஆயுதம் எனவும், ஊர் என்பது முருகப்பெருமான் தன் ஆயுதத்தைப் பயன்படுத்திய இடத்தைக் குறிப்பதாகும். சைவ சமய புராணத்தின்படி, தீய சக்திகளை அழிப்பதற்காக வேலுடன் தாமரைக் குளத்தில் தோன்றிய ஒரு பழங்குடியின வேட்டைக்காரனாக முருகக் கடவுள் கருதப்படுகின்றார். எனவே "வேலூர்" என்றால் முருகன் தோன்றிய ஊர் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

     இம்மாவட்டம் பெரும்பாலும் வேல மரங்களால் சூழப்பட்டுக் காணப்பட்டதால் இவ்வூர் வேலூர் என்று அழைக்கப்பட்டது.

 
5. விழுப்புரம்


     எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் ஊர்; அறியாமையில் இருந்து விழிப்பைத் தரக்கூடிய ஊர் - விழுப்புரம்‘ என்கிறார் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திரர்.

     ‘விழுப்புரம் என்றால் விழுமியபுரம்‘ என்று பொருள் தருவார் கிருபானந்தவாரியார்.

     இராமன் வில்லைப் பிடித்துப் பொன்மானை நோக்கி அம்பு எய்த இடம் என்பதால், இந்த இடம் வில்லுப்புரம் என ஆயிற்று' என்பார் திருக்குறளார் வீ.முனுசாமி.

     இப்பகுதி சோழர்கள் காலத்தில் பிரம்மதேயமாயிருந்தது. நடுநாட்டுச் சதுர்வேதிமங்கலத்தில், அப்புறம் காடவராயர் ஆட்சி ஏற்பட்டு, அதன்பிறகு பாண்டியர் கைப்பற்றினர். பாண்டியர்களின் தளபதியான விழுப்பரையர்களே அங்கே நிர்வாகத்தில் முக்கியமான ஸ்தானம் வகிக்கிற சமூகமாக இருந்தனர். அதனால் இப்பகுதி விழுப்புரம் என்று பெயர் பெற்றது.


( தொடர்ந்து அறிவோம் . . . )
 

முனைவர் இரா. ஆனந்த் 

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
 

1 comment: