பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 121                                                                                           இதழ் - ௧
நாள் : 18- 08 - 2024                                                                        நாள் :  -  - ௨௦௨௪
 


இராஜராஜன் பெயரில் எழுந்த ஊர்கள்

இராஜராஜன்

     தென்னார்க்காட்டுத் திண்டிவன வட்டத்திலுள்ள தாதாபுரம் எனும் ஊர் இராஜராஜபுரமே ஆகும். நெல்லைநாட்டிலுள்ள இராதாபுரமும் இராஜராஜ புரமே என்று சாசனம் கூறுகின்றது. இராஜராஜன் ஈழநாட்டுப் பாலாவி நதிக்கரையில் திருக்கே தீச்சரம் என்னும் பாடல் பெற்ற திருக் கோவிலைத் தன்னகத்தே உடைய மாதோட்டம் இராஜராஜபுரம் என்னும் பெயர் பெற்றது.

ஜயங்கொண்டான்

     ஜயங்கொண்டான் என்ற விருதுப் பெயரைத் தாங்கி நின்ற நகரங்களுள் தலை சிறந்தது ஜயங்கொண்ட சோழபுரமாகும். அஃது இராஜராஜன் காலம் முதல் சில நூற்றாண்டுகள் சோழராட்சியில் சிறந்த நகரமாகும். இன்று திருச்சி நாட்டு உடையார் பாளைய வட்டத்தில் அஃது ஒரு சிற்றூராக இருக்கிறது. 

     ஜயங்கொண்ட பட்டணம் என்னும் ஊர் சிதம்பர வட்டத்தில் உள்ளது. ஜயங்கொண்டான் என்ற பெயருடைய ஊர்கள் பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் சில உண்டு. திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலை வட்டத்தில் உள்ள மகாதானபுரத்தின் உட்கிடையாகிய சிற்றூர் பழைய சங்கடம் என்னும் விந்தையான பெயரைக் கொண்டுள்ளது. பழைய ஜயங்கொண்ட சோழபுரம் என்பதே நாளடைவில் பழைய சங்கடமாய் முடிந்தது என்பர். 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .

முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

1 comment: