பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

 

இதழ் - 4                                                                  இதழ் - ௪ 
நாள் : 22-5-2022                                                   நாள் : உஉ-ரு-௨உஉ

 
1.    சென்னை -    புலியூர்க் கோட்டம் 
 
      சங்க காலப் பெண்ணாற்றிற்கும், பொன்னையாற்றுக்கும் நடுவே உள்ள தொண்டை மண்டலத்தில்தான் இப்போதுள்ள சென்னை இருக்கிறது. 
 
     சோழர் காலத்தில் புலியூர்க் கோட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்குத் தலைநகரம் புலியூர் என்பது. அது சென்னைக்கடுத்த கோடம்பாக்கம் புகைவண்டி நிலையத்திலிருந்து அரைக்கல் தொலைவில் உள்ள சிற்றூர். அதனைச் சுற்றியுள்ள கோவூர், பூவிருந்தவல்லி, குன்றத்தூர் முதலிய ஊர்களைக் கொண்ட நிலப்பகுதி 'புலியூர்க் கோட்டம்' எனப்பட்டது.
 
2. சென்னை -    சென்னப்பட்டினம்  
 
 
      ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் மூலம் இப்போதுள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை 1639-ஆம் ஆண்டில் வாங்கினர். 
 
     கடற்கரை ஒட்டிய 3 மைல் அளவுள்ள இவ்விடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான தர்மாலா சென்னப்ப நாயக்கரின் நிலமாதலால், அவருடைய நினைவாக இக்கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊருக்குச் சென்னப்பட்டினம் என்று பெயர் வைத்தனர். அப்பெயர் வருவி இன்று சென்னையாக வழங்கப்பட்டு வருகிறது. 
 
     ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்ட பேரிதிம்மப்பா இந்தப் பகுதியில் இரண்டு கோயில்கள் கட்ட வழிவகுத்தார். சென்னகேவசப் பெருமாள் என விஷ்ணுவுக்கும், சென்ன மல்லீஸ்வரர் என சிவனுக்கும் கோவில்கள் கட்டினார். சென்னகேசவரும், சென்ன மல்லீஸ்வரரும் வீற்றிருக்கும் கோயில்கள் அமைந்துள்ள முக்கிய இடமாதலின் இப்பகுதி சென்னப்பட்டினம் என்று வழங்கப்பட்டது. பின்னாளில் அப்பெயர் மருவி சென்னையாக வழங்கப்படுகிறது. 
 
3. சென்னை -    மதராசபட்டினம்
 
  
     கடலோரத்தில் வாழ்ந்த 'மதராசன்' என்ற மீனவத் தலைவனின் பெயரால் மதராஸ் என்றும், அவ்விடம் நகரமாக உருவானதால் பட்டினம் என்பதும் சேர்ந்து மதராசபட்டினம் என்று அழைக்கபட்டது.
 
4. சென்னை - மெட்ராஸ்
 
 
      சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரரசர்களான முத்தரையர்கள் வசம் கொஞ்ச காலம் இருந்தது. அதனால் இப்பகுதி முத்தராசபட்டினம் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்பெயர் காலமாற்றத்திற்கு ஏற்ப முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவி மெட்ராஸ் என்று மாறியது.
 
     ஆற்காடு நவாப்புகள் மதராசபட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்குப் பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லில் இருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்துள்ளது.

     போர்த்துக்கீசிய வணிகன் மெட்ரா (Madra) என்பவரின் பெயராலேயே இப்பகுதி மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது.
 
     மதராஸ் என்பதை “மெட்ராஸ்” என்று பிற மொழிகளில் எழுதினார்கள். எனவே சென்னை நகரின் பெயரை சென்னை என்று ஒரே பெயரில் மட்டுமே எல்லா மொழிகளிலும் அழைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதை தமிழகத்தின் மேனாள் முதல் அமைச்சர் கருணாநிதி 17-7-1996 அன்று சட்டசபையில் அறிவித்தார். அது முதற்கொண்டு சென்னை என்ற பெயர் நிரந்தரப் பெயராக அமைந்துவிட்டது.


( தொடர்ந்து அறிவோம் . . . ) 

 

முனைவர் இரா. ஆனந்த் 

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
 

1 comment: