இதழ் - 103 இதழ் - ௧0௩
நாள் : 14-04-2024 நாள் : ௧௪-0௪-௨௦௨௪
அரியநாத முதலியார்
நாயக்கர்கள் மதுரையில் அரசு புரிந்தபோது அவர்க்குப் பெருந்துணை புரிந்தவர் அரியநாத முதலியார் ஆவர். குழப்பம் நிறைந்திருந்த பாண்டி நாட்டில் நீர்மையும் ஒழுங்கும் நிலைபெறச் செய்தவர் அவரே. அவர் நெல்லை நாட்டில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிப் பயிர்த் தொழிலைப் பண்புற வளர்த்தனர். பொருநையாற்றிலுள்ள நான்காம் அணைக்கட்டு இன்றும் அரியநாத முதலியார் அணை என்றே அழைக்கப்படுகின்றது. திருநெல்வேலி நகருக்குத் தென்மேற்கே பத்து மைல் தூரத்திலுள்ள அரியநாயகபுரம் என்னும் ஊரின் பெயரிலும் அவர் பெருமை விளங்கக் காணலாம். பொருநையாற்றின் வடகரையிற் பொருந்தியுள்ள அவ்வூர் வளங்கள் பலவும் நிறைந்த சிற்றூராக விளங்குகின்றது. நாயக்கர் ஆட்சியில் அவர் பெற்ற தளவாய் என்ற பட்டம் இன்றும் நெல்லை நாட்டிலுள்ள தளவாய் முதலியார் குடும்பத்தில் நிலவுகின்றது.
வீரராகவ முதலியார்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆற்றங்கரை ஓரத்தில் வீரராகவபுரம் அமைந்துள்ளது. அது வீரராகவ முதலியார் பெயரால் அமைந்த ஊராகும். முதலியார் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையில் ஆட்சி புரிந்தபோது வீரராகவர் அவருடைய தென்னாட்டில் பிரதிநிதியாகத் விளங்கினார் என்பது சாசனத்தால் அறியப்படும். இன்றும் அவ்வூர் அவர் பெயரைத் தாங்கி நிற்பதைக் காணலாம்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
Super
ReplyDelete