பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் - 7                                                                           இதழ் -   
நாள் : 12-6-2022                                                             நாள் : ௧௨--உஉ

 


பழமொழி – 7
 

'அயலறியா அட்(டு)ஊணோ இல்'

 

    பக்கத்து வீட்டிற்குத் தெரியாமல் நம் வீட்டில் சமைத்து உண்பது இயலாத காாியம் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

        முயலலோ வேண்டா; முனிவரை யானும்
        இயல்பினார் என்பது இனத்தால் அறிக!
        கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா;
        'அயலறியா அட்(டு)ஊணோ இல்'.

 

    ஒருவர் நல்ல இயல்பினை உடையவரா? தீய இயல்பினை உடையவரா? என்ற உண்மைத் தன்மையை அறிய வேண்டுமானால், அவருக்கு நெருக்கமாக உள்ள அவரின் நண்பர்களைக் கண்டால் அவரை அறிந்துவிட முடியும். அது நம் வீட்டில் சமைத்து உண்பது, நம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வாறு நாம் சொல்லாமலே தெரிந்துவிடுமோ அதைப்போலவே, நம் இயல்பும்,  நம்மைச் சார்ந்த நண்பர்களைக் கண்டாலே அறிந்துவிட முடியும் என்பது இப்பழமொழியின் பொருளாகும். 

     இதனை வள்ளுவர்,

        மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
        இனந்தூய்மை தூவா வரும்
   

        ( அதிகாரம் : சிற்றினம் சேராமை         குறள் எண் : 455 )

     மனத்தின் தூய்மை மற்றும் தான் செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் அவர்கள் சேர்ந்த இனத்தின் (நண்பர்கள், சுற்றம்) தூய்மையைப் பொறுத்தே ஏற்படும் என்கிறார்.

 

கிராமத்துப் பழமொழி  (சொலவடை)
 

“ பந்திக்கு முந்து படைக்குப்பிந்து “

 
      “பந்திக்கு முந்து" என்றால் சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும். கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது என்பதால், பந்திக்கு முந்தவேண்டும் என்று எண்ணிக் கொள்கிறோம்.

     "படைக்குப் பிந்து" என்றால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் பொழுது மற்றவர்களை முன் நிறுத்திவிட்டு, நாம் பிந்திச் செல்லவேண்டும் என்று எண்ணிக் கொள்கிறோம்? ஆனால் இது உண்மையல்ல.


உண்மைப் பொருள் :

     அக்காலத்தில் காலாட்படையின் ஒரு பிரிவுக்கு "பந்திப்படை" என்று பெயர். போர் நடக்கும்  காலத்தில்  பந்திப்படையை  முன்னே  செல்ல  விட்டுவிட்டு, பயங்கர ஆயுதங்களைக் கொண்ட படைகளைப் பந்திப்படைக்கு பிந்திச் செல்ல வைத்து, போரை முறையாக நடத்த வேண்டும் என்பதைக் இப்பழமொழி உணா்த்துகிறது.

     நாம் எதிராளியிடம் சண்டையிடும்போதும்கூட அதில் ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டும் என்பது சங்ககால போா் முறை ஒழுக்கம் என்பதை விளக்கும் மிக அருமையான பழமொழி ஆகும். இப்பழமொழிக்கு வேறு ஒரு விளக்கமும் வழக்கத்தில் உள்ளது.

     பந்தியில் சாப்பிடுவதற்கு நம் வலது கை முந்தும். படைக்கு செல்லும் சமயத்தில் நம் வலது கை பின்னோக்கி இழுத்து அம்பை எய்யும். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அந்த அளவிற்கு அம்பு வேகமாகச் சென்று எதிரியை தாக்கும் என்பதால், வலது கை பந்திக்கு முந்தும். படைக்குப் பிந்தும் என்று சொல்கின்றார்கள். இதுவே நாளடைவில் உருமாறி "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்று உருவாகிவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர். 

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள் திறத்தினை தொடர்ந்து வரும் வாரங்களளில் அறிவோம் . . .


முனைவர் தே. ராஜகுமார்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

 

 

2 comments:

  1. பந்திக்கு முந்து...... பழமொழி விளக்கம் அருமை 👍 சிறப்பு 👌

    ReplyDelete