பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

 

இதழ் - 5                                                                       இதழ் - ரு  
நாள் : 29-5-2022                                                         நாள் : உ௯-ரு-௨௦உஉ
 
 

     சென்ற இதழில் உயிரெழுத்துகளின் பிறப்பு குறித்து அறிந்தோம். இந்த இதழில் மெய்யெழுத்துகள், சார்பெழுத்துகளின் பிறப்பினை அறிவோம்.
உயிரெழுத்துகளின் பிறப்பு : https://rmvtamizhamutham.blogspot.com/p/blog-page_21.html

மெய்யெழுத்துகளின் பிறப்பு
 

  • க், ங் ஆகிய இரு மெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

  • ச், ஞ்  ஆகிய இரு மெய்களும் நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

  • ட், ண்  ஆகிய இரு மெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

         “கஙவுஞ்  சஞவும் டணவும் முதலிடை
          நுனிநா வண்ண முறமுறை வருமே.” நன்னூல்  -  நூற்பா. -  79
  • த், ந் ஆகிய இரு மெய்களும் மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.

  • ப், ம் ஆகிய இரு மெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.

  • ய் - நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.

  • ர், ழ் ஆகிய இரு மெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.

  • ல் - மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.

  • ள் - மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.

  • வ் - மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.

  • ற், ன் ஆகிய இரு மெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.

 
சார்பெழுத்துகள்
  • ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.

  • ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.

  • பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதல் எழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.

         “ஆய்தக் கிடந்ததலை யங்கா முயற்சி
          சார்பெழுத் தேனவுந் தம்முத  லனைய.” நன்னூல்  -  நூற்பா. - 87
 
     இவ்வாறு ஒவ்வொரு எழுத்தும் பிறக்கும் இடங்களையும் அதற்கான முயற்சிகளையும் முறையாகத் தெரிந்து கொண்டு, விதிகளை மனதில் பதித்துக் கொண்டால் பிழைகளைத் தவிர்க்கலாம்.


( தொடர்ந்து கற்போம் . . . )
 

தி.செ. மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020. 
 

No comments:

Post a Comment