பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

 

இதழ் - 6                                                                            இதழ் -   
நாள் : 5-6-2022                                                                நாள் : --உஉ

 
சார்பெழுத்துகள்

தமிழ்மொழியில் உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் மட்டுமல்லாமல் பிற எழுத்துகளும் உள்ளன. அவை முதலெழுத்துகளைச் சார்ந்து நிற்கின்றன. ஆகையால்தான் அவற்றைச் சார்பெழுத்துகள் என்கிறோம். அவற்றின் வகைகள் ஒவ்வொன்றாகக் கீழே காண்போம்.

உயிர்மெய்

உயிர்மெய் எழுத்துகள் என்பவை உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்துகள் ஆகும்.

சான்று

க் +அ = க , ச் +இ = சி

உயிர்மெய் எழுத்துகள் பிறக்கும்போது ஒற்று முன்னும் உயிர் பின்னும் அமையும். அவ்வுயிர் எழுத்தின் ஒலி அளவே உயிர்மெய் எழுத்தின் அளவாகும். உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் மெய் எழுத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

சான்று

க, ங, ச, ஞ,  ட, ண

பதினெட்டு மெய் எழுத்துகளுடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 216 (18X12=216) உயிர்மெய் எழுத்துகளாகப் பிறக்கின்றன. முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையில் அடங்கும்.

புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்

ஏனை யுயிரோடு ருவு திரிந்தும்

உயிரளவாய தன்வடி வொழித் திருவயிற்

பெயரொடு மொற்றுமுன்னாய் வரு முயிர்மெய். (நன்னூல் நூற்பா - 89)

விளக்கம்

அகர உயிர் எழுத்துடன் சேர்ந்து வரும்போது புள்ளி இல்லாமலும் மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது வடிவம் திரிந்தும் வரும். மாத்திரை கொள்ளும்போது உயிரெழுத்தின் மாத்திரையே கொண்டு வரும். மெய்யெழுத்து முன்பும் உயிரெழுத்து பின்பும் வந்து உயிர்மெய் என்று இரண்டின் பெயரையும் பெற்று வரும். உயிர்மெய் எழுத்துகளை உயிர் எழுத்தின் அடிப்படையில் உயிர்மெய்க் குறில் உயிர்மெய் நெடில் என இருவகையாகப் பிரிக்கலாம்.

உயிர்மெய்க் குறில்

மெய்யெழுத்து பதினெட்டு உடன் உயிர் குற்றெழுத்து ஐந்தும் (அ, இ, உ, எ, ஒ) ( 18 X 5 = 90 ) சேர்ந்து வருவது உயிர்மெய்க் குறில் ஆகும்.

சான்று

க் +அ =க      க் +இ = கி        க் + உ= கு    க் +எ = கெ      க் +ஒ = கொ

உயிர்மெய் நெடில்

மெய்யெழுத்து பதினெட்டுடன் உயிர்நெட்டெழுத்து (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ,  ஔ) ( 18 X 7 = 126 ) ஏழும் சேர்ந்து வருவது உயிர்மெய் நெடில் ஆகும்.

சான்று

     க்+ஆ= கா       க்+ஈ = கீ       க் + ஊ = கூ        க்+ ஏ = கே
     க்+ஐ = கை       க்+ஓ = கோ    க்+ ஔ = கௌ 
 
 
உயிர்மெய் எழுத்துகளை மெய்எழுத்தின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

உயிர்மெய் வல்லினம்

வல்லினமெய் ஆறுடன் பன்னிரெண்டு உயிர்எழுத்துகளும் (6X12=72) சேர்வது வல்லின உயிர்மெய் ஆகும். 

க, ச, ட, த, ப, ற.

 

உயிர்மெய் இடையினம்

இடையினமெய் ஆறுடன் உயிரெழுத்துகள் பன்னிரெண்டும் சேர்வது இடையின உயிர்மெய் ஆகும். 

ய, ர, ல, வ, ள, ழ.

 

உயிர்மெய் மெல்லினம்

மெல்லினமெய் ஆறுடன் உயிரெழுத்து பன்னிரெண்டும் சேர்வது உயிர்மெய் மெல்லினம் ஆகும். 

ஞ, ங, ண, ந, ம, ன.



( தொடர்ந்து கற்போம் . . . )
 

தி.செ. மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020. 
 

1 comment: