பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

 

இதழ் - 5                                                                       இதழ் - ரு  
நாள் : 29-5-2022                                                         நாள் : உ௯-ரு-௨௦உஉ
 
 

1. பொள்ளாச்சி - பொழிலாட்சி


     பொழில் + ஆட்சி = பொழிலாட்சி. இயற்கை அழகுடன் ஆட்சி செய்யும் இடமாதலின் பொழிலாட்சி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் அப்பெயர் மருவி பொள்ளாச்சி என்று இன்று வழங்கப்படுகின்றது.

 
2. தூத்துக்குடி – முத்துக்குளித்துறை, சோதிக்கரை
 

     கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் முத்துகுளித்துறை என்றும் சோதிக்கரை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலிருந்தே இப்பகுதியில் முத்துக்குளிக்கும் தொழில் நடந்து வந்துள்ளதால் முத்துக்குளித்துறை என்று அழைத்துள்ளனர்.

     பின்னர் 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் தமது அறிக்கையில் தவறுதலாக தோத்துக்குரை என்று பதிவு செய்துள்ளார். அப்பெயர் மருவி பின்னாளில் தூத்துக்குடி என மாறியுள்ளது. ஐரோப்பியர்களின் வாயில் தூத்துக்குடி என்ற பெயர் நுழையாததால் TUTICORIN என்று ஆங்கிலத்தில் பதிவானது.

 
3. ஆற்காடு - ஆல்காடு


     ஆல் + காடு = ஆற்காடு. இப்பகுதியில் ஆலமரங்கள் நிறைந்து காணப்பட்டதால் ஆற்காடு என்று அழைக்கப்பட்டது. சோழ மன்னர்கள் ஆண்ட இப்பகுதியை ஆற்காடு என்று அழைத்தனர்.

 
4. சேலம் - சேரலம்


     மலைகள் நிறைந்த இப்பகுதியைச் சைலம் என்று அழைத்தனர். இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் சேரலம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் அப்பெயர் மருவி சேலம் என்று ஆனது.    

 
5. திருச்சிராப்பள்ளி - திருசிராய்ப்பள்ளி


     முன்பொரு காலத்தில் இவ்விடம் திருசிராய்ப்பள்ளி என்று அழைக்கப்பட்டது. சிராய் - பாறை, பள்ளி - கோவில். பாறை மீது அமைந்துள்ள கோவில். மலைக்கோட்டையைக் குறிக்கிறது. திருசிராய்ப்பள்ளி என்ற பெயர்தான் மருவி திருச்சிராப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது.
 
     திரிசரன் என்ற பெயருடைய அரக்கன் சிவனை வழிப்பட்டுப் பயனடைந்ததாகச்  சொல்லப்படுகின்றது. அவன் பெயராலேயே இது திரிசரன்பள்ளி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் திருச்சிராப்பள்ளி என்றானது.
 
     சிரா என்ற துறவி இங்குள்ள பாறையில் தவம் செய்துவந்துள்ளதால் இப்பகுதி சிராப்பள்ளி என்று பெயர் பெற்று பின்னாளில் திருச்சிராப்பள்ளி என்றும் சொல்லப்படுகிறது.


( தொடர்ந்து அறிவோம் . . . )
 

முனைவர் இரா. ஆனந்த் 

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

2 comments:

  1. பொழிலாட்சி என்ற பெயரே பொருத்தமாக உள்ளது.
    முத்துக்குளித்துறை,ஆல்காடு இப்பெயர்களும் பொருத்தமாகவே இருக்கிறது.
    நன்றி

    ReplyDelete