பக்கங்கள்

பழமொழி அறிவோம்

 

இதழ் - 6                                                                            இதழ் -   
நாள் : 5-6-2022                                                                நாள் : --உஉ
 

பழமொழி – 6

'அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு'.

          அம்பினை எய்து ஒரு பசுவிடம் பால் கறக்க முயல்வது பேதமை என்பது இப்பழமொழியின பொருளாகும். (ஆ – பசு ; ஆறு – வினைச்சொல் என்பதால் பேதமை எனப் பொருள் கொள்ள வேண்டும்)
 
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்,
'அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு'.

 அன்பினால் ஒருவனுடைய உள்ளம் நெகிழ்ச்சி அடையுமாறு செய்து அவன் வழியே நடந்து, அவனால் காரியத்தை முடித்துக் கொள்ளுதலே சிறந்தது. அவ்வாறு இல்லாமல், நின்ற இடத்திலேயே அவனை வற்புறுத்திக் காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வது தவறானதாகும். இது பசுவிடம் பால் கறக்கப் போகும் முன் அதன் கன்றைக் குடிக்க விட்டுப் பசுவிலே பால் சுரந்து வரும்பொழுது பாலைக் கறக்க வேண்டும். அதைவிடுத்து அம்பு எய்து பசுவைக் கொன்று பால் கறக்க முயல்வது போன்ற பேதைமையான செயல் ஆகும் என இப்பழமொழி நமக்கு பொருள் உணா்த்துகிறது.

செயலை முடிக்கும் முறை இப்பழமொழியில் கூறப்பட்டது. பிறரை மனம் நோகச் செய்து காரியம் சாதிக்க நினைப்பவரின் பேதைமையும் சொல்லப்பட்டது.

 

கிராமத்துப் பழமொழி (சொலவடை) 

“கழுதைக்கு தொியுமா கற்பூர வாசனை”

 
 
விளக்கம் : 

“கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை“ எனத் திருத்தம் கொள்ள வேண்டும். இங்கு, கழு என்பது ஒருவகைக் கோரைப் புல் ஆகும். இக்கோரைப் புல் கொண்டு பாய் தைத்துப் படுத்துப் பார்த்தால் அதில் கற்பூர மணம் கமழும் என்பதே இப்பழமொழியின் உண்மைப் பொருளாகும். ஆனால், நாம் கழுதைக்கு (விலங்கு) கற்பூர வாசனை தெரியாது எனத் தவறாகப் பொருள் விளங்கிக் கொள்கிறோம்.

 
     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளின் பொருள்திறத்தினை தொடர்ந்து அறிவோம் . . . 
 

முனைவர் தே. ராஜகுமார்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
 
 

2 comments: