இதழ் - 120 இதழ் - ௧௨௦
நாள் : 10- 08 - 2024 நாள் : ௧௦ - ௦௮ - ௨௦௨௪
இராஜராஜன் பெயரில் எழுந்த ஊர்கள்
இராஜராஜன் வெற்றிக் கொண்டு கைப்பற்றிய சில ஊர்களில் தன்னுடைய சிறப்புப் பெயர்களைச் சூட்டினார். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இராஜராஜன், அருண்மொழி வர்மன் என்று குறிக்கப்படுகின்றான்.
அருண்மொழி என்பது அருமொழி என மருவி வழங்குவதாயிற்று. பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த கான நாட்டில் அருமொழித் தேவபுரம் என்னும் பெயருடைய ஊர் இருந்ததாகச் சாசனம் அறிவிக்கின்றது.
இன்னும், தஞ்சை நாட்டிலும், தென்னார்க்காட்டிலும் அருமொழித் தேவன் என்னும் பெயருடைய ஊர்கள் பலவுண்டு.
தஞ்சை நாட்டுப் பட்டுக்கோட்டை வட்டத்தில் சோழபுரம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அதன் முழுப் பெயர் மும்முடிச் சோழன் என்பதாகும். நாஞ்சில் நாட்டில் நாகர்கோவிலுக்கருகேயுள்ள கோட்டாறு, மும்முடிச் சோழ நல்லூர் என முன்னாளில் வழங்கிற்று.
தொண்டை நாட்டிலுள்ள திருக்காளத்தி, மும்முடிச் சோழபுரம் என்னும் மறுபெயர் பெற்றது. இராஜராஜன் கால முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை அவ்வூர் மும்முடிச் சோழபுரம் என வழங்கிற்று. இன்னும், மும்முடிச் சோழமங்கலம் (திருச்சி), மும்முடிக் குப்பம் (செங்கற்பட்டு), மும்முடிச் சோழகன் (தென்னார்க்காடு) முதலிய ஊர்ப் பெயர்களில் இராஜராஜனது விருதுப் பெயர்களைக் காணலாம்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
GOOD INFORMATION
ReplyDelete