இதழ் - 122 இதழ் - ௧௨௨
நாள் : 25- 08 - 2024 நாள் : ௨௫ - ௦௮ - ௨௦௨௪
பழமொழி – 122
” உருவு திருவூட்டு மாறு ”
விளக்கம்
ஒரு மனிதனின் உருவத்தோற்றம் அவனுக்கு வெற்றியைத் தரும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
விளக்கம்
வாள்திற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கொளி - காட்டப்
பொறுவரு தன்மைகண்(டு) அஃதொழிந்தார் அஃதால்
உருவு திருவூட்டு மாறு'.
பொறுவரு தன்மைகண்(டு) அஃதொழிந்தார் அஃதால்
உருவு திருவூட்டு மாறு'.
“ஆள் பாதி ஆடை பாதி” என்பது சான்றோர் முதுமொழி. இச்சொல்லுக்கு ஏற்ப உருவத்தின் தோற்றம் எதிரிகளையும் எதிரில் வருவோரையும் மயக்கம் கொள்ளச் செய்யும்.
திருமால் மோகினி அவதாரம் (மாயத்தோற்றம்) எடுத்து அரக்கர்களை அழித்த புராணச்செய்தி அனைவரும் அறிந்ததே. மதுகைடவர் என்ற அரக்கர் கூட்டம் திருமாலை வெற்றி கொள்ளும் பொருட்டு சுற்றி வளைத்துக்கொண்டனர். அந்நிலையில் திருமால், ஆற்றல் பொருந்திய பேரொளிமிக்க தன் திருமேனியைக் காட்டினார். திருமாலின் திருஉருவ அழகினைக்கண்டு அரக்கர்கள் நினைவிழந்து நின்றனர். திருமால் வெற்றி கொண்டார் என்பதை 'உருவு திருவூட்டு மாறு' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இதன் மூலம் உருவப்பொலிவு ஒருவருக்கு வெற்றியைத் தரும் என்ற உண்மையை அறியமுடிகிறது. இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
GOOD INFORMATION
ReplyDelete