பக்கங்கள்

இலக்கணம் கற்போம்


இதழ் - 7                                                                           இதழ் -   
நாள் : 12-6-2022                                                             நாள் : ௧௨--உஉ

  

ஆய்தம்  -  ஃ 
 
     [ சார்பெழுத்துகள் குறித்து நாம் தொடர்ச்சியாக சிந்தித்து வருகிறோம். சென்ற இதழில் உயிர்மெய் குறித்து சிந்தித்தோம். இவ்விதழில் ஆய்த எழுத்து குறித்து சிந்திப்போம். ]
 
ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான முதன்மைக் குறியீடு ஆகும்.
 
     இவ்வெழுத்து என்ற அமைப்பில் மூன்று புள்ளிகள் கொண்ட வடிவமாக இருக்கும். இது நுட்பமான ஒலிப்பு முறையை உடையது. இவ்வெழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கும்.

     தமிழில் இலக்கணப் பெயர்களும், எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளது.

ஆய்த எழுத்துக்கு உரிய வேறு பெயர்கள்

     ஆய்த எழுத்தின் வடிவத்தைக் கொண்டு அஃகேனம் என்றும் மூன்று புள்ளிகளைப் பெற்று வருவதால் முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.

     உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல், தனித்த நிலையைப் பெற்று தனித்து நின்று தனியொரு எழுத்தாக இருப்பதால் தனிநிலை எனப்படுகிறது.

     ஆய்தம் என்பது பொதுவாகக் கருவி எனப் பொருள்படும். போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்பர்.
 
 

     ஆய்த எழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். 
 
ஆய்த எழுத்து தனித்து இயங்காது.

     “குறியதன் முன்னராய்தப் புள்ளி
      உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே”  ( நன்னூல் நூற்பா. 90 )


சான்று

      எஃகு        அஃது

     இங்கு குறிப்பிடப்பட்ட ஆய்தம் முற்றாய்தம் ஆகும். முதல் எழுத்துகளாகிய உயர் எழுத்தையும் மெய் எழுத்தையும் சார்ந்து இயங்குவதால் இது சார்பெழுத்து வகைகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

 
( தொடர்ந்து கற்போம் . . . )
 

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020. 
 

2 comments: