பக்கங்கள்

பழமொழி அறிவோம்


 

இதழ் - 5                                                                       இதழ் - ரு  
நாள் : 29-5-2022                                                         நாள் : உ௯-ரு-௨௦உஉ
 
 
 
பழமொழி - 5

“ அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்“

     ஒருவன் தனக்கு பொருத்தமில்லாத ஆபரணங்களை (நகை) அணிய விருப்பம் கொள்ள மாட்டான் என்பது இப்பழமொழியின் பொருள். (கொள்ளாக் கலம் - பொருந்தாத நகைகள்)

    தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
    அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
    அமையாகும் வெற்ப! 'அணியாரே தம்மைத்
    தமவேனும் கொள்ளாக் கலம்'


     தன்னை சேர்ந்தவர்கள் அவர்களின் தேவைக்காக நம்மை புகழ்ந்து பேசும் போது, அந்தப் புகழ்ச்சிக்கு மனம் மயங்கிவிடவும் கூடாது, மகிழ்ச்சி கொள்ளவும் கூடாது. அவ்வாறு நாம் புகழ்ச்சியை விரும்பினால் நம் உள்ளத்தில் அகந்தை மேலோங்கி தம் ஒழுக்கத்திலிருந்து மாறுபட நேரிடும். அத்தகைய புகழ்ச்சி நாம் பொருத்தமில்லாத நகையை அணிந்தால் எவ்வாறு இருக்குமோ அதைப்போன்றது என இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.


கிராமத்துப் பழமொழி (சொலவடை)


“ விருந்தும் மருந்தும் மூன்று நாள் ”                

விளக்கம் :

     நாம் உறவினர் இல்லத்திற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே உண்ண வேண்டும் என்றும், நோய்க்கு மருந்தை உட்கொண்டாலும் மூன்று நாள் மட்டுமே உண்ண வேண்டும் என இப்பழமொழிக்குப் பொருள் கொள்வது தவறாகும்.

     வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் நாம் உண்ணும் உணவை விருந்தைப் போல உட்கொள்ள வேண்டும். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மருந்தைப் போல உட்கொள்ள வேண்டும் என்பது இப்பழமொழியின் உண்மை பொருளாகும். அவ்வாறு உட்கொண்டால் மட்டுமே நம் உடல்நிலை சீராக இருக்கும் என நம் முன்னோர்கள் இத்தகைய பழமொழியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
 

( தொடர்ந்து அறிவோம் . . . )

 

முனைவர் தே. ராஜகுமார்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

 



1 comment:

  1. விருந்தும் மருந்தும் மூன்று நாள்
    விளக்கம்
    அருமை 👍

    ReplyDelete