இதழ் - 92 இதழ் - ௯௨
நாள் : 28-01-2024 நாள் : ௨௮-0௧-௨௦௨௪
பழமொழி – 92
” இனங்கழு வேற்றினார் இல் ”
விளக்கம்
மக்கள் பெரும்பாலோரின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்சியாளர்கள் ஆட்சி செய்ய வேண்டுமே தவிர, சட்டம் இப்படிக் கூறுகிறதென அவர்களுக்கு மாறுபட்டு நின்று அவர்களை ஒழிக்க முயலக்கூடாது என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார்
கனங்கொண்(டு) உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
'இனங்கழு வேற்றினார் இல்'.
இங்கு கழுவேற்றுதல் என்றால் பண்டைய தமிழ் நாட்டில் நிலவிய மரண தண்டனை ஆகும். பெருங்குற்றங்களைச் செய்தவர்களை அரசரின் கட்டளைக்கிணங்க கொன்றுவிடும் நிகழ்வைக் குறிக்கும்.
ஆட்சியாளன் ஒருவன் தன் மக்களுக்கு ஒன்றினைச் செய்ய முயன்று அச்செயலானது தவறாக இருக்கும் சூழலில், மக்கள் நலன் கருதி அச்செயலைச் செய்யமாட்டான். அதைவிடுத்து அச்செயலைச் செய்வான் ஆயின் தன் மக்களைக் தானே கழுவில் ஏற்றியதற்கு நிகராகும்.
சிறந்த ஆட்சியாளன் தன் மக்களுக்குச் அத்தகைய செயலைச் செய்யமாட்டான் என்பதை உணர்தவே 'இனங்கழு வேற்றினார் இல்' என்ற இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
மேலும், இத்தகைய பழமொழிகளின் மூலம் நமது முன்னோர்களின் சொற்திறத்தினை வரும் வாரங்களில் காணலாம்...
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
GOOD INFORMATION
ReplyDelete