பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 6                                                                            இதழ் -   
நாள் : 5-6-2022                                                                நாள் : --உஉ
 

 

 

மதுரையின் பல்வேறு பெயர்கள் :

 

கூடல்

·        எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்து கூடும் வளமான நகர் என்பதால், கூடல் என்னும் பெயர் பெற்றது. சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் அனைவரும் கூடிய இடமாதலால் கூடல் என்னும் பெயர் பெற்றது.


நான்மாடக்கூடல்

·        திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால் நான்மாடக்கூடல் என்று பெயர் பெற்றிருந்தது.

·        கன்னிகோவில், கரியமால் கோவில், காளிகோவில், ஆலவாய்க் கோவில் ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால், நான்மாடக்கூடல் என்னும் பெயர் வழங்கப்படலாயிற்று.

·        வருண பகவான் மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். பாண்டியன் அதைப் பற்றி இறைவனிடம் முறையிட, இறைவன் மதுரையைக் காக்க நான்கு மேகங்களை அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்னும் பெயர் பெற்றதை பரஞ்சோதியார் தனது திருவிளையால் புராண நூலில் கூறியுள்ளார்.

 

ஆலவாய்

        பாண்டியன் மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தர வேண்டினான். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆணையிட்டார். பாம்பு தன் வாலை நீட்டி வலமாக உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததது. (திருவிளையாடற் புராணம்).

·        ஆலவாய் என்பது ஆலத்தை (விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.


கடம்பவனம்

·       மதுரை நகரம் முன்னொரு காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதி ஆகும். முன்னொரு நாளில் தனஞ்சயன் என்னும் வணிகன் இந்தக் காட்டுப் பகுதியை இரவில் கடந்து சென்றபோது, அங்குள்ள கடம்ப மரத்தின் கீழ் இருந்த சுயம்பு லிங்கத்தை விண்ணகத் தலைவனாகிய தேவேந்திரன், தனது தேவர் கூட்டத்தாருடன் வந்து வழிபட்டு மீண்டும் வானுலகிற்குச் சென்றதைக் கண்டு அதிசயித்தான். உடனே விரைந்து சென்று குலசேகர பாண்டிய அரசனிடம் இந்த அற்புதக் காட்சியை விவரித்தான். குலசேகரன் உடனடியாகத் தனது பரிவாரங்களை அனுப்பி காட்டைத் திருத்தி “சுயம்பு லிங்கத்தை” மையமாக்கி கற்கோவில் ஒன்றை எழுப்பினான். கடம்பவனத்தைச் சுற்றி வளர்ந்துள்ள நகரமே இன்று மதுரை என்று அழைக்கப்படுகிறது.

 

 ( தொடர்ந்து அறிவோம் . . . )

 

முனைவர் இரா. ஆனந்த் 

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
 

 




2 comments: