பக்கங்கள்

பழமொழி அறிவோம்

இதழ் – 10                                                                      இதழ் –  
நாள் : 03-07-2022                                                         நாள் : ௦௩-௦௭-௨௦௨௨
 
 
 
 
பழமொழி – 10

'அரிவாரைக் காட்டார் நரி'
 
    நெற்கதிரை அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒருவரிடம் அறிவார்ந்தவர்கள் அவரின் பணி கெடுமாறு நரியைக் காண்பிக்க மாட்டார்கள் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.

    தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
    பரியார் இடைப்புகார் பண்பறிவார், மன்ற;
    விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
    'அரிவாரைக் காட்டார் நரி'


     சிறந்த அறிவுடையோன் ஒருவன் அறிவுடைய சமூகத்துடன் தன் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து பயனற்ற அறிவற்றோருடன் தன் நட்பை வளர்த்துக் கொண்டால் அவர்களால் நல்ல பயனுள்ள பொழுதுகள் வீணாகும். ஏனெனில், பயனற்றவர்கள் நெற்கதிரை அறுவடை செய்பவரிடம் நரியைக் காண்பித்து பொழுதைக் வீணாகக் கழிப்பதுடன் செய்யும் பணியையும் கெடச்செய்வர். ஆகையால் அறிவறிந்து நட்பு கொள்ள வேண்டும் என இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

இதனை, வள்ளுவர்
         பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
         அகநட்பு ஒரீஇ விடல்
                      -  குறள் 830
     எனக் கூறுகிறார்.

     பகைவரும் நட்பாகப் பழகுவதற்கு ஏற்ற காலம் வருங்காலத்திலே, அவருடன் முகத்தளவால் நட்புச் செய்து, உள்ளத்தில் போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும் என்பது மேற்கூறப்பட்ட குறளின் பொருள்.

இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினை தொடர்ந்து அறிவோம் . . .

முனைவர் தே. ராஜகுமார்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.  
 

1 comment: