பக்கங்கள்

பழமொழி அறிவோம்

 

இதழ் – 9                                                                         இதழ் – ௯
நாள் – 26-06-2022                                                         நாள் – உ௬.௬.௨௰உஉ

 
 
 
 
பழமொழி –9

” அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு ”

     நெற்கதிரை அறுவடை செய்த பின்னர் அதில் மிஞ்சும் தாளை (பயனற்ற கதிர்) தண்ணீரில் அமிழ்த்தி அழுகச்செய்தல் வேண்டும் என்பது பழமொழியின் விளக்கமாகும்.

    பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்,
    இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
    விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
    'அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு'.

     ஒருநாட்டில் மன்னன் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் நிலையில் அவனுக்குப் பகைவர்கள் என யாரேனும் இருந்தால் அவர்களை முற்றிலுமாகக் களைந்து விடவேண்டும். அவ்வாறு களையாமல் விட்டு வைத்தால் அப்பகை மேலும் வளர்ந்து நாட்டையே அழித்துவிடும். 
 
இதனை,
    நெற்கதிரை அறுவடை செய்த பின்னர் அதில் மிஞ்சும் தாளை (பயனற்ற நெற்கதிர்) தண்ணீரில் அமிழ்த்தி அழுகச்செய்தல் வேண்டும். இல்லையெனில் பயனற்ற களைகள் அதனுள் வளர்ந்து வளமான நெற்கதிரையும் பாழ்படுத்திவிடும் என்பதே, ”அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு”  என்ற இப்பழமொழியின் பொருளாகும்.




கிராமத்துப் பழமொழி (சொலவடை)

’’ ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ’’

     ஐந்து பெண் மக்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்று நாம் தவறாகப் பொருளால் விளங்கிக் கொள்கிறோம்.

உண்மை விளக்கம்
 
(1)  ஆடம்பரமாய் வாழும் தாய்
(2)  பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
(3)  ஒழுக்கமற்ற மனைவி
(4)  ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய சகோதரர்கள்
(5)  சொல்பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்

     ஆகிய ஐந்தும் இருந்தால் அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை அழிவை நோக்கிச் செல்லும் என்பதே உண்மையான பொருளாகும்.

     இத்தகைய கிராமத்துப் பழமொழிகளினின் பொருள்திறத்தினை தொடர்ந்து அறிவோம்.

முனைவர் தே. ராஜகுமார்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

1 comment:

  1. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி பழமொழி விளக்கம் அருமை 👍

    ReplyDelete