இதழ் - 124 இதழ் - ௧௨௪
நாள் : 08- 09 - 2024 நாள் : ௦அ - ௦௯ - ௨௦௨௪
உய்யக் கொண்டான்
உய்யக்கொண்டான் என்பது இராஜராஜரின் சிறப்பும் பெயர்களில் ஒன்று. இப்பெயர் தமிழ்நாட்டு மலைகளோடும் காய்களோடும் வருவி நிற்கக் காணலாம். சோழ நாட்டில் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்றாகிய கற்குடி என்பது உய்யக்கொண்டான் திருமலை என்று பெயர் பெற்றது. இன்னும் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் காவிரியாற்றினின்றும் பிரிந்து செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்கால் இம்மன்னன் பெயரையே தாங்கி நிலவுகின்றது.
சோழபுரம் என்னும் பெயருடைய ஊர்களில் ஒன்று வடஆர்க்காட்டு வேலூருக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்தில் உள்ளது. அதன் பழம் பெயர் காட்டுத்தும்பூர் என்பதாகும். இராஜராஜ சோழன் அவ்வூரில் இராஜஇராஜேச்சரம் என்னும் சிவாலயம் கட்டியதோடு ஊரின் பெயரையும் உய்யகொண்டான் சோழபுரம் என மாற்றிவிட்டதாகத் தெரிகின்றது. இப்பொழுது ஆலயம் பழுதுற்றிருக்கின்றது. ஊர்ப்பெயரும் சோழபுரம் எனக் குறுகிவிட்டது.
இராமநாதபுரத்துத் திருப்பத்தூர் வட்டத்தில் உய்யக் கொண்டான் என்ற ஊர் உள்ளது. தென்னாற்காட்டு விருத்தாச்சல வட்டத்தில் உய்யக்கொண்ட ராவி என்பது ஓர் ஊரின் பெயர்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
GOOD INFORMATION
ReplyDelete