பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 30                                                                 இதழ் -
நாள் : 20-11-2022                                                     நாள் : ௨௦ - ௧௧ - ௨௦௨௨
 
       
 
திரிசொல்
     கற்றவர்கள் மட்டுமே பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரும் சொல் திரிசொல் எனப்படும்.

சான்று
  • கிள்ளை      -  கிளி
  • செப்பினான்  -  உரைத்தான்
  • படர்ந்தான்    -  சென்றான்
திரிசொற்கள் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும்.
  • பெயர்த்திரிசொல்       சான்று - அழுவம், வங்கம்
  • வினைத்திரிசொல்      சான்று - இயம்பினான், பயின்றாள்
  • இடைத்திரிசொல்       சான்று - அன்ன, மான
  • உரித்திரிசொல்         சான்று - கூர், கழி

     ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும்
     பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
     அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்
                         -  நன்னூல். நூற்பா எண். 272

ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
  • வங்கம், அம்பி, நாவாய் என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரி சொல் என்பர்.

பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
  • இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனப்படும்.
 
மகேஸ்வரி தி. செ.
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020 
 

No comments:

Post a Comment