பக்கங்கள்

தமிழ்ப்புலவர் அறிவோம் - ஒளவை

இதழ் - 123                                                                                     இதழ் - ௧
நாள் : 01 - 09 - 2024                                                                  நாள் :  -  - ௨௦௨௪



ஔவை ( கி.பி. 9 )

     கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவை பற்றிய செய்திகளைக் காணலாம். இவ் ஔவை  சுந்தரர், சேரமான் போன்றோர் வாழ்ந்த காலப் பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார்.

     தற்போது முதல் வணக்கத்திற்குரிய கடவுளாகக் கருதப்படும் பிள்ளையார், தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்கமான சங்க இலக்கியத்திலும் அதன் பின்னர் வந்த  இலக்கியங்களிலும் காணப்படாதவர். 'பிள்ளையார் வழிபாடு' (பிள்ளையாருக்கு விநாயகர் என்ற பெயரும் உண்டு) தமிழகத்துக்கு வந்த வரலாறு தனியானது. இங்கு அதனைச்   சுட்டப் போவதில்லை.

     ஔவை என்றாலே தமிழ்மொழியில் வல்லமை உடையவர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் ஔவை இயற்றிய 'விநாயகர் அகவல்' தமிழ் இலக்கியப்பரப்பிலும் சமயப்பரப்பிலும் புகழ்பெற்றதாகக் காணப்படுகிறது. பல  செய்திகளை 'விநாயகர் அகவல்' மூலமாக ஔவை கூறியுள்ளார்.

விநாயகர் அகவல் பிறந்த கதை

     சுந்தரமூர்த்தி நாயனாரும்  சேரமான் என்ற சேர அரசரும் நண்பர்கள். இருவரும் கைலாயம் சென்று, சிவனைக் கண்டு, களிக்க எண்ணியிருந்தனர். இவர்கள் எதிர்பார்த்திருந்த நாளும் வந்தது. ஐராவதம் என்ற வெள்ளை யானை மீது சுந்தரரும் வெள்ளைக் குதிரையின் மீது சேரமானும் ஏறி கைலாயச்  செலவை மேற்கொண்டனர்.

     ஔவை  ஒவ்வொரு நாளும் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் சிவன் கோவிலிலுள்ள  பிள்ளையாருக்கு நீரும் பூவும் இட்டுக் கும்பிடுவது வழக்கம். அன்றும் அவ்வாறே பூசை செய்து கொண்டு இருந்தார். விசும்பு வழியே கைலாயம் சென்று கொண்டிருந்த சுந்தரர், சேரமான் இருவர் கண்களிலும் ஔவை தென்பட்டார். சேரமான் ஔவையை நோக்கி 'நாங்கள் கைலாயம் சென்று சிவனைக் காண உள்ளோம்; நீங்களும் வாருங்கள்' என்றார். இதனைக் கேட்ட ஔவை நீங்கள் முன் செல்லுங்கள்; உங்களைத் தொடர்ந்து வருகிறேன்  எனக் கூறி அவசர அவசரமாகப் பூசையைத்  தொடர்ந்தார். 

     'ஔவையே  அவசரமாகப் பூசையைச் செய்யக் காரணம் யாது' எனக் கேட்டார் விநாயகர்.

     அதற்கு ஔவை, 'அப்பனே சிவனைக் காணக் கைலாயம் செல்லும் சுந்தரரும் சேரமானும் என்னையும் வருமாறு அழைத்தனர்; நான் உமக்குரிய பூசையை முடித்து விட்டு வருவதாகக் கூறினேன்; வேகமாகச் சென்றால் தான் அவர்களுடன் சேர முடியும்; அதனால்தான் அவசரமாகப் பூசையைச் செய்கிறேன்' என்றார்.

பதில் கூறுகிறார் விநாயகர், 

     'ஔவையே அவசரப் பூசை வேண்டாமே; எப்போதும் போலப் பொறுமையாகப் பூசையை முடியுங்கள்;  நீங்கள் கைலாயம் செல்ல நான் துணை நிற்பேன்' என்றார்.

     இந்த உறுதிமொழியினைக்  கேட்டு நெக்குருகி ஔவை பாடியதே 'விநாயகர் அகவல்'  ஆகும். நிதானமாகப் பூசையை முடித்த ஔவையைத் தன்  துதிக்கையால் தூக்கிக்  கைலாயத்தில்  சேர்ப்பித்தார் விநாயகர். இவருக்குப் பின் வந்த சுந்தரரும் சேரமானும் ஔவையை ஆச்சரியத்துடன் நோக்கினர். இதன் மூலம் விநாயகர் பெருமையை அனைவரும் அறிந்தனர். 

இந்நிகழ்வு நடந்த திருக்கோவிலூரில் இதற்கான சான்று உள்ளது.



(வரும் கிழமை விநாயகர் அகவலுடன் ஔவை வருவார்...)


சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர் 
தமிழ்த்துறை 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி 
கோயம்புத்தூர் - 641020

2 comments: