பக்கங்கள்

பழமொழி அறிவோம்

 

இதழ் - 4                                                                  இதழ் - ௪ 
நாள் : 22-5-2022                                                   நாள் : உஉ-ரு-௨உஉ

 

பழமொழி -4

' அஞ்சுவார்க்கு இல்லை அரண் '

     'வலிமை' என்பது ஒருவர்க்குத் தம்பால் அமைவதாகும், பிறர் பாதுகாப்பாலும், அரண் முதலிய பாதுகாப்பாலும், துணையாலும் அமைவதில்லை என்பது இப்பழமொழியின் பொருள்.

        வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
        தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
        மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
        'அஞ்சுவார்க் கில்லை அரண்'.

     இயற்கையோடு அமைந்த பெரிய மலை நாட்டில் வாழக்கூடிய ஒருவன், செல்வ வளங்கள் பலவற்றையும், வீரர்கள் பலரையும் தன் துணைக்கு வைத்துள்ளான். அவன் உள்ளம் நடுங்கி கோழையாக இருந்தால் மேற்கண்ட துணை எவ்வளவு இருந்தாலும் அது பயனற்ற துணையே ஆகும். அத்துணையானது அவனுக்கு எக்காலத்திலும் பாதுகாப்பு அரணாக அமையாது. அவ்வாறு அமைந்தாலும் அது தற்காலிகமானதாகவே அமையும் என இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.


கிராமத்துப் பழமொழி (சொலவடை)

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; 
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

விளக்கம்: 

    பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப்பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அவனைச் சிற்பி "என் சிற்பம் எப்படி உள்ளது? என்று கேட்டான். அதற்குச் அவன் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது என்றான். அதாவது சிற்பத்தில்  நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை என விளக்கமளிக்கிறான். இத்தகைய கிராமத்துப் பழமொழிகளினின் பொருள்திறத்தினை தொடர்ந்து அறிவோம்.


( தொடர்ந்து அறிவோம் . . . )

 

முனைவர் தே. ராஜகுமார்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

 

1 comment: