பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 31                                                                இதழ் -
நாள் : 27-11-2022                                                   நாள் : ௨௭ - ௧௧ - ௨௦௨௨
 
 
வடசொல்
 
     சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழ்மொழியில் கலந்துவரும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
 
          பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
          ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்
                                         - நன்னூல் நூற்பா எண். 274

     வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துகளாலும் வடமொழிக்குச் சிறப்பாக உள்ள எழுத்துகளாலும் வடமொழியிலிருந்து தமிழ்மொழியில் வந்து வழங்கும் சொற்கள் வடசொற்கள் என்பது இதன்பொருள். வடசொற்களை தற்சமம், தற்பவம் என இரு வகையாகப் பிரிப்பர்.

தற்சம வடசொல்
     வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவான எழுத்தால் அமைந்த வடசொல் தமிழில் வந்து வழங்குவது தற்சம வடசொல்லாகும்.

சான்று
  • கமலம்
  • குங்குமம்
  • வசனம்
  • அலங்காரம்

தற்பவ வடசொல்
     வடமொழிக்குரிய சிறப்பெழுத்துகளாலும், இருமொழிகளுக்குரிய பொது எழுத்துகளாலும் அமைந்த வடசொல் தற்பவ வடசொல். வடசொற்களைத் தமிழில் எழுதும்பொழுது தமிழினிமைக்கு ஏற்றவாறு சிலவடமொழி எழுத்துகளுக்கு ஈடாகத் தமிழ் எழுத்தை எழுதுவது வழக்கம்.

சான்று

  • லக்ஷ்மி     -    இலக்குமி
  • விஷம்       -    விடம்
  • ஜயம்        -    சயம்
  • சரஸ்வதி    -    சரசுவதி
     தமிழ்மொழியின் இனிய இலக்கணப் பாங்கினை வரும் வாரங்களில் அறியலாம் . . . 
 
தி. செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி 
கோயம்புத்தூர்-641020 
 

No comments:

Post a Comment