பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 69                                                                                         இதழ் -
நாள் : 20-08-2023                                                                          நாள் : 0-0-௨௦௨௩
 
 
 
எயில்
 
     பழங்காலத்தில் சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் என்னும் நகரம் விளங்கிற்று. அவ்வூரில் சோழ மன்னர்கள் அரசு வீற்றிருந்த செய்தியைச் சேக்கிழார் வாக்கால் அறியலாம். அக்காலத்தில் அஃது அரண் அமைந்த சிறந்த நகரமாக இருந்ததென்பது சில அடையாளங்களால் அறியப்படும். பேரெயில் என்னும் பெயருடைய ஒரு கோட்டை அதன் அருகே இருந்தது. அக்கோட்டையைச் சுற்றி ஒரு சிற்றூர் எழுந்தது. அவ்வூர் பேரெயிலூர் என்று வழங்கப்பெற்றது. இந்நாளில் அப்பெயர் சிதைந்து பேரையூர் என வழங்குகின்றது.
 
    பாண்டி நாட்டில் கானப்பேரெயில் என்னும் பெருங்கோட்டை இருந்தது. வேங்கை மார்பன் என்று பெயர் பெற்ற வீரன் ஒருவன் அக்கோட்டையின் தலைவனாக விளங்கினான். பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அவன் மீது படையெடுத்துச் சென்று கானக்கோட்டையைக் கைப்பற்றிய செய்தி சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வெற்றியின் காரணமாக அம்மன்னன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்னும் உயரிய பட்டம் பெற்றான்.
 
    கானப்பேரெயிலுக்கு அணித்தாக ஏழெயில் என்னும் கோட்டை ஒன்று இருந்ததாகத் தெரிகின்றது. ஒருகால் அக்கோட்டையை நலங்கிள்ளி கைப்பற்றினான். அக்கோட்டை இராமநாதபுரத்துச் சிவகங்கை வட்டத்தில் உள்ள எழுபொன் கோட்டை என்ற ஊரே பழைய ஏழெயில் என்பர்.
 
    நெல்லை நாட்டில் ஆழ்வார் திருநகரிக்கு அருகே ஒரு பேரெயில் இருந்ததாகத் தெரிகின்றது. அக்கோட்டை நகரத்தில் திருமால் கோயில் கொண்டருளினார். ஆதலால், அவ்வூர் திருப்பேரெயில் என்று வழங்கப்பட்டது. 
 
 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் 
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

1 comment:

  1. ரெயில் மாதிரி தொடர்ச்சியாக கோட்டை இருந்தததுனால் பேரெயில் என்று பொருள் கொள்ளலாம்.

    ReplyDelete