இதழ் - 117 இதழ் - ௧௧௭
நாள் : 21- 07 - 2024 நாள் : ௨௧ - 0௭ - ௨௦௨௪
சோழ நாட்டு மன்னர்
உத்தம சோழன்
கண்டராதித்தருடைய திருமகனாய்த் தோன்றிய உத்தம சோழன் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவன் பெயரால் எழுந்த ஊர்கள் சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் கொங்கு நாட்டிலும் உண்டு. தஞ்சை நாட்டில் நன்னில வட்டத்தில் உள்ள உத்தம சோழபுரம் என்னும் ஊரும், தென்னார்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் காணப்படும் உத்தம சோழ மங்கலமும், செங்கற்பட்டு மதுராந்தக வட்டத்திலுள்ள உத்தம நல்லூரும், சேலம் நாட்டிலுள்ள உத்தம சோழபுரமும் இவன் ஆண்ட பகுதிகளாகும். மதுரையை ஆண்ட வீர பாண்டியனோடு இவன் போர் புரிந்து அவன் தலை கொண்டான் என்று சாசனம் அறிவிக்கின்றது. அவ்வெற்றியின் அடையாளமாக இவனும் மதுராந்தகன் என்னும் விருதுப் பெயர் பெற்றிருந்தான் என்பர்.
சுந்தர சோழன்
அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன் மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள சௌந்திரிய சோழபுரம் என்னும் ஊரும், செங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழவரமும் இவன் பெயர் கொண்டு விளங்குகின்றன. இம்மன்னனைப் 'பொன்மாளிகைத் துஞ்சிய தேவன்' எனக் கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன் மனையாள் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். தஞ்சையில் எழுந்த இராசராசேச்சுரம் என்னும் பெருங் கோயிலுள் இவ் விருவரின் படிமங்களையும் குந்தவைப் பிராட்டியார் நிறுவியுள்ளார்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
Excellent anna
ReplyDelete