பக்கங்கள்

தமிழ்ச்சொல் தெளிவோம்

இதழ் : 1                                                                           இதழ் :
நாள் : 1-5-2022                                                               நாள் :
-ரு-௨உஉ

 
 
      ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டு மக்கள் பேசும் மொழியின் வளர்ச்சியைப் பொறுத்து அமைந்துள்ளது. தாய்மொழியை வளர்ப்பதிலும் அதனைப் பேணிக்காப்பதிலும் ஒவ்வொருவரும் அக்கறைக்கொள்வது இங்கு அவசியமாகிறது. ஆனால் இன்று வளர்ந்து வரும் காலச்சூழலுக்கு ஏற்ப மக்களிடையே மொழியின் மீதான அலட்சியப் போக்கைக் காண முடிகிறது. அதன் விளைவாகப் பெரும்பாலும் மொழிக்கலப்புடனே உரையாடி வருகிறோம். இந்நிலை தொடர்ந்து நடைபெறுமாயின் மொழியின் வளர்ச்சி குன்றிவிடும்.

ஆகவே, தாய்மொழியைக் கவனத்துடன் பயன்படுத்தவும், அதன் செல்வாக்கை மிகையளவு பெறவும் நாம் முயற்சி செய்வது அவசியம். அதன் ஒரு முயற்சியாகப் பிறமொழிச் சொல் கலவாத தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் நிலையை உருவாக்க தமிழமுதம் மின்னிதழில் தமிழ்ச்சொல் தெளிவோம் என்ற பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் மூலம் நாம் பயன்படுத்தும் ஐந்து பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கிழமைதோறும் (வாரந்தோறும்) தெரிந்து கொள்ளலாம். அவற்றைப் பயன்பாட்டில் கொண்டு வருவது நமது கடமையாகும். இனிவரும் காலங்களில் நாம் முடிந்த அளவு தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தலாம்.

சமஸ்கிருதச் சொற்கள் தமிழ் மொழியில் கலந்து ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறலாம்.

அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் சொற்களில் எவை சமஸ்கிருதச் சொற்கள் எனத் தெரியாத அளவு தமிழுடன் அவை கலந்து உள்ளன.

சமஸ்கிருத மொழி               தமிழ்மொழி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பரம்பரை                        தலை
முறைபலன்                      பயன்
வீரம்                             மறம்
நீதி                                  அறம்
சங்கீதம்                          இசை
 
சான்றாக சில தொடர்கள் மட்டும் இங்கு குறிப்பிடப்படுகின்றன.
 
1.  நீங்கள் பரம்பரை பரம்பரையாக நீடூழி வாழ்க.
   நீங்கள் தலைமுறை தலைமுறையாக நீடூழி வாழ்க.

2.  எச்செயலையும் பலனை எதிர்பார்த்துச் செய்யக் கூடாது.
   எச்செயலையும் பயனை எதிர்பார்த்துச் செய்யக் கூடாது.

3. சங்க காலத்தில் அறமும் வீரமும் பாடுபொருளாக இருந்தன.
   சங்க காலத்தில் அறமும் மறமும் பாடுபொருளாக இருந்தன.

4.  திருக்குறள் நீதி இலக்கியங்களில் ஒன்றாகும்.
   திருக்குறள் அற இலக்கியங்களில் ஒன்றாகும்.

5.  உள்ளத்துக்கு இன்பம் அளிப்பது சங்கீதம் ஆகும்.
    உள்ளத்துக்கு இன்பம் அளிப்பது இசை ஆகும்.

 

( தொடர்ச்சி அடுத்த இதழில்….. )
 
 

1 comment:

  1. பரம்பரைக்கு இணையான தமிழ்சொல் தலைமுறை என்று கொள்ளலாமா ஐயா?

    ReplyDelete