பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 90

இதழ் - 90                                                                                                       இதழ் - 0
நாள் : 14-01-2024                                                                                         நாள் : -0-௨௦௨

 
ஆத்திசூடி (ஔவை)
 மனந்தடு மாறேல் 
 
உரை
        எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 87
கஞ்சனூ ராழ்வார் கனன்முக்கா லிக்குளிருந்
தஞ்சாமற் சைவநிலை யாக்கினர்பார் – தஞ்சமென்பார்
புண்ணியமே மெய்த்துணையாம் புன்னைவன பூபதியே
எண்ணி மனந்தடுமா றேல்.

உரை
    தஞ்சம் என்று வருபவர்களுக்கு உதவும் புண்ணியத்தையே நல்ல துணையாகக் கொள்ளும் புன்னைவன பூபதியே! கஞ்சனூராழ்வார் என்பவர் கனல் உமிழும் முக்காலியையே குளிரும் இருக்கையாகக் கொண்டு வைணவ அவைக்கு அஞ்சாமல் சைவத்தை நிலைநிறுத்தின செயலைக் காண்க. அதனால் எதற்காகிலும் மனந்தடுமாமறமல் உறுதியாக நிற்க.

விளக்கம்
     கஞ்சனூராழ்வார் – காவிரி வடகரையிலுள்ள கஞ்சனூரில் வைணவக் குடும்பத்தில் பிறந்தமையால் இப்பெயரால் வழங்கப்பட்டவர். இயற்பெயர் சுதர்சனன் அதனால் சுதர்சன சிவாச்சாரியார் என்றும் அழைக்கப்படுகிறார். அரதத்த சிவாச்சாரியார் என்பது சைவ மக்களிடம் வழங்கப்படும் பெயர். கனல் – தீ, வெப்பம். முக்காலி – மூன்று கால்களையுடைய இருக்கை. சைவநிலை ஆக்கினார் – சைவத்தின் பெருமையை நிலைநாட்டினார். தஞ்சம் – அடைக்கலம். மெய்த்துணை – உண்மைத்துணை. மற்ற துணையாவும் வீண் என்பது கருத்து. எண்ணி – பலவற்றையும் நினைந்து. மனந்தடுமாறேல் – உள்ளம் கலங்கக் கூடாது. 

அரதத்தாசாரியர் கதை
இவர் கஞ்சனூரிலிருந்த வைணவ அந்தணருள்ளே ஒருவராகிய வாசுதேவர் என்பவருடைய புதல்வர். அதுபற்றி இவரைக் கஞ்சனூராழ்வார் எனவுஞ் சொல்வர். இவர் தந்தையாகிய வாசுதேவர் கொள்ளும் வைணவ சமயத்தை இளம்பருவந் தொடங்கி மறுத்துரையாடி சைவ சமய மேன்மைகளைப் பாராட்டி வந்தார். வைணவர்கள் வந்து வைணவத்தை முதன்மைப்படுத்திப் பேசியபோது யான் ஒழுகக் காய்ச்சிய இரும்பு முக்காலியின் மேலிருந்து சிவபிரானே கடவுளென்று சாதிப்பேன் என்று சொல்லி அவ்வாறு காய்ச்சி வைக்கப்பட்ட இரும்பு முக்காலியின் மேலிருந்து நால்வேதப் பெருமை முதலியவற்றைச் சொல்லி சைவசமயத்தை நிலைநிறுத்தினார். அப்போது சிவபெருமானின் அருளால் அந்தக் காய்ச்சிய முக்காலி அவருக்கு குளிர்ந்த இருக்கை ஆயிற்று.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)


கருத்து
  கொண்ட கொள்கையில் கலங்காமல் உறுதியுடன் நிற்க வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.   

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

1 comment: