பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 91

இதழ் - 91                                                                                                 இதழ் - 
நாள் : 21-01-2024                                                                                 நாள் : -0-௨௦௨

 
ஆத்திசூடி (ஔவை)
 மாற்றானுக் கிடங்கொடேல் 
 
உரை
பகைவன் உன்னைத் துன்புறத்தும்படி இடங்கொடுக்காதே.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 88
        காகம் பசித்துவரக் காரிருளி னன்மைசெய்த
        கூகை பகற்பட்ட கொடுமையினால் – வாகு
        புனைதாமா புன்னைவன பூபாலா மோச
        மெனமாற்றா னுக்கிடங்கொ டேல்.

உரை
     ஒளிபொருந்திய ஞாயிற்றைப் போன்ற புன்னைவன பூபாலனே! பகைகொண்ட காகமொன்று நள்ளிரவில் பசித்துவர அதற்கு நன்மைசெய்த கூகை தீப்பட்ட கொடுமையை அறிந்துள்ளதால் இழப்பு நேரும்வண்ணம் பகைவனுக்கு உன்னருகே எதற்காகவும் இடங்கொடாதே. 

விளக்கம்
     காரிருள் – நள்ளிரவு. கூகை – பருந்துவகையுள் ஒன்று. காரிருளில் நன்மை செய்த கூகை – நம்பி வந்த காகத்திற்கு அடைக்கலம் அளித்த கூகை. பகற்பட்ட கொடுமை – தீயில் பட்டழிந்த கொடுமை. வாகு – ஒளி. தாமன் - சூரியன். மோசமென – இழப்பு நேரும்விதமாக. மாற்றான் – பகைவன்.

கூகை கதை
     தென்னாட்டில் மயிலை என்னும் நகரில் ஓராலமரத்தில் மேகவர்ணன் என்னும் பெயருடைய காகராசன் தன்னினங்களோடு வாழ்ந்துவந்தான். அந்தக் காகங்களையெல்லாம் உருமர்த்தனன் என்னும் கூகையரசன் தன்னினங்களோடு இராக்காலங்களில் வந்து கொல்லத் தொடங்கிற்று. இதனைக் காகராசன் அறந்து மந்திரிகளோடு ஆலோசித்தபோது பலரும் பலவாறு கூறினர். அவருள்ளே சிரஞ்சீவி என்னும் பெயருடைய கிழமந்திரி “அடுத்துக் கெடுத்தலே தக்க புத்தி” என்று அரசனுக்குச் சொல்லிவிட்டுக் கூகைகள் இருக்குமிடத்திலே போய் “யான் நீதிகூறி அரசனாலே தண்டிக்கப்பட்டதினால் பிரிந்து பசித்து உங்களிடம் அடைக்கலம் வந்தேன்” என்றது. குரூரநாசன் என்னும் மந்திரி ஒழிந்த கூகைகளெல்லாம் அக்காகத்தினை நம்பிச் சேர்த்துக் கொண்டன. குரூரநாசன் என்னும் மந்திரி உடனே வேற்றிடம் போயிற்று. காகம் நாளுக்குநாள் கூகைகளின் கோட்டைவாயிலில் சிறிதுசிறிதாக விறகுகளைச் சேர்த்துவைத்துப் பின்னர்த் தன்னினங்களைக் கொண்டு நெருப்பு வைப்பித்துவிடக் கூகைகளெல்லாம் எரிந்துபோயின.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
    பகைவர்கள் நம்மை அண்டவிடாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment