பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 92

இதழ் - 92                                                                                                                    இதழ் - 
நாள் : 28-01-2024                                                                                                     நாள் : -0-௨௦௨

 
ஆத்திசூடி (ஔவை)
” மிகைபடச் சொல்லேல் 
 
உரை
    சொற்களை மிதமிஞ்சிப் பேசாதே.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 89
         சங்கரா சாரியனார் தாயை யிகழ்குலத்தார்
         தங்கண்மனை யேசுடலை தானாகிப் – பங்கமுற்றார்
         ஆதலினாற் புன்னைவன வையனே யாரிடத்தும்
         ஏது மிகைபடச்சொல் லேல்.

உரை
     புன்னைவன அரசனே! ஆதிசங்கராசாரியரின் தாய் ஆரியாம்பிகை இறந்தபொழுது பண்பாடற்று பேசி இகழ்ச்சியாக நடந்துகொண்டதால் பிராமணர்கள் தங்கள் வீடுகள் சுடலையாகி இடருற்றனர். ஆதலினால் யாரிடத்தும் மிகைபட எதுவும் சொல்லாதே. 

விளக்கம்
    சங்கராசாரியனார் – ஆதிசங்கரர். காலடியில் பிறந்து அத்வைத வேதாந்த தத்துவத்தை இந்திய நாடுமுழுவதும் பரப்பியவர். பிரம்ம சூத்திரத்திற்கு வேதாந்த சார உரை எழுதியவர். தங்கள் மனையே சுடலைதானாகி – ஆதிசங்கரரின் சாபத்தால் பிராமணர்களின் வீடுகள் சுடுகாடாகிப் போயின. பங்கம் – இடர். யாரிடத்தும் ஏதும் என்று சொற்களைப் பயன்படுத்தும் விதத்தினை வலியுறுத்துகின்றார்.

சங்கராசாரியர் கதை
    சங்கராசாரியர் சந்நியாசம் பெறும்போது அவர் தாயாகிய ஆரியாம்பாள் அவரை நோக்கி “மகனே! என்னுடைய அந்நிய காலத்திலே உன்கையாலே கடன் கழிக்கப்பெற்றுக் கதியடைய விரும்புகிறேன்” என்றாள். சங்கராசாரியர் தாயை நோக்கி “அன்னாய்! நீ அந்திய காலத்திலே என்னை நினைப்பாயாயின் நான் எங்கே இருந்தாலும் நீ இருக்குமிடத்திலே வந்து உனக்குச் செயற்பாலனவாகிய கிரியைகளையெல்லாம் செய்துமுடித்து நற்கதியிலே உன்னைச் சேர்ப்பேன்” என்று சொல்லித் தீர்த்த யாத்திரை போயினார். பின்னர்த் தாயின் அந்திம காலத்தை யோகத்தினாலே உணர்ந்து, வான்வழிகொண்டு மலைநாட்டை அடைந்து தாய்க்கு முன்னர்ச் சென்று நின்றார். 

    தாயார் சங்கராசாரியரைக் கண்டு பெருமகிழ்ச்சிகொண்டு “மகனே! எனக்குக் கடன்களைச் செய்து நற்கதியில் விடுக” என்றாள். சங்கராசாரியர் தாயார்க்கு அத்துவித உண்மையாகிய நிர்க்குணத்துவ உபாசனா மார்க்கங் கூறினார். தாயார் “மகனே! என்னறிவு இதற்கேற்றதன்று. சகுணோபாசனையுட் சிறந்ததொன்று கூறவல்லையோ?” என்றார். அப்போது சங்கராசாரியர் எட்டுப் புயங்கப் பிரயாத விருத்தத்தினாலே சிவத்துதி செய்தார். உடனே சிவாஞ்ஞையினாலே சிவகணங்கள் தோன்றின.

அதுகண்ட தாயார் கண்களை இறுக மூடிக்கொண்டு “மகனே! மகனே! நான் இவர்களோடு செல்ல மாட்டேன்” என்றார். சங்கராசாரியர் “உனக்கானப் பெரும்பேறுங் கிடையாதொழிந்ததா?“ என்று கூறி விட்டுணுபுயங்கத் துதி செய்தார். உடனே தாயார் விட்டுணு (விஷ்ணு) பாதங்களிற் சிந்தை வைத்துத் தேகத்தை விடுத்தார். அப்போது சங்கராசாரியர் தமது முன்னை ஆச்சிரமத்தின் தாயுடம்பிற்கு இறுதிச்சடங்கு செய்யும்படி பிராமணர்களை வருவித்து அவர்கள் வீட்டிலுள்ள புனித அக்கினியைத் தரும்படி கேட்டார். பிராமணர்கள் இவர் சந்நியாச தருமத்திற்கு மாறாக நடக்கின்றார் என்று தங்களுக்குத் தோன்றியவாறெல்லாம் பேசி அக்னி கொடுக்க உடன்படாது போயினர். தாயாரைச் சுமந்துகொண்டு போய்ச் சுடலையிற் சேர்ப்பாருமில்லாமையாற் சங்கராசாரியர் இரண்டு கைகளையும் தேய்த்து வலக்கையிலே தீயுண்டாக்கி அவ்வீட்டையே விறகாக்கித் தாயார் கிரியையை முடித்துவிட்டுப் பிராமணர்களை நோக்கி “உங்களுக்குச் சந்நியாசி பிச்சைதரும் தகுதியில்லாது போகக்கடவது. நீவிர் வேதத்துக்குப் புறத்தராகக்கடவீர். உங்கள் வீடுகளிலே மயானம் உண்டாகுக. உங்கள் தேசம் சந்நியாசிகள் வருதற்குத் தகுதியற்றதாகுக” என்று சபித்துச் சென்றார்.

(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
    தேவையற்ற சொற்களை மிதமிஞ்சிப் பேசாதிருக்க வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

1 comment:

  1. "உங்கள் தேசம் சன்னியாசிகள் வருவதற்கு தகுதியற்றதாகுக" என்ற கூற்றுக்கு இணங்க தற்போதும் அந்த அக்ரஹாரம் மயானமாகவே இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் அது எவ்விடம்?

    ReplyDelete